×

சையது முஷ்டாக் அலி டிராபி டி20 அரையிறுதிக்கு முன்னேறியது தமிழகம்

சூரத்: சையது முஷ்டாக் அலி டி20  தொடரின் சூப்பர் லீக் சுற்றில் ஜார்கண்ட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வீழ்த்திய தமிழக அணி அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றது.பி பிரிவில் நடந்த சூப்பர் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜார்கண்ட் அணிகள் மோதின.  சூரத்தில் நடைபெற்ற இப்போட்டியில்  டாஸ் வென்ற ஜார்கண்ட் முதலில் பேட் செய்தது. தமிழக வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த அணி 18.1 ஓவரில் 85 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் சவுரப் திவாரி 24,  சுமித் குமார் 19, விவேகானந்த் திவாரி 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

தமிழக பந்துவீச்சில் மணிமாறன் சித்தார்த் 4, வாஷிங்டன் சுந்தர் 3, முருகன் அஸ்வின், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்  கைப்பற்றினர். தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அரி நிஷாந்த் 7 ரன்,  ஷாருக்கான் 24 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். தமிழக அணி 13.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து எளிதாக வென்றது. வாஷிங்டன் சுந்தர் 38 ரன் (22 பந்து, 3 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.சூப்பர் லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஜார்கண்ட் பரிதாபமாக வெளியேறியது. தமிழகம் 4 போட்டியில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பி பிரிவில் முதல் இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.




Tags : Syed Mushtaq Ali Trophy T20 ,Semi Finals ,semifinals ,Tamil Nadu , Syed Mushtaq Ali Trophy, T20, semifinals
× RELATED ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு