வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் காயத்தால் விலகினார் தவான்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற உள்ள டி20 போட்டித் தொடரில் இருந்து, இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்கள் நடைபெற உள்ளன. முதல் டி20 போட்டி மும்பையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் முழங்கால் மூட்டு காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.இது குறித்து பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்: சூரத்தில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக நடந்த சையது முஷ்டாக் அலி டிராபி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடியபோது தவானின் காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு தையல் போடப்பட்டுள்ள நிலையில், தவான் முழுவதுமாகக் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் குழு தரப்பில் தெரிவிக்கப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, டி20 தொடருக்கான இந்திய அணியில் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டியின்போது விக்கெட் கீப்பர் சாஹாவின் வலது கை மோதிர விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு மும்பையில் செவ்வாயன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. முழு உடல்தகுதி பெறுவதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அவர் விரைவில் பயிற்சி மேற்கொள்வார். இவ்வாறு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் வங்கதேசத்துடன் நடந்த தொடருக்கான அணியில் சாம்சன் இடம் பெற்றிருந்தார். எனினும், அவருக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்படாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டதை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: