×

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் சேமிப்பு 46,000 செல்லாத நோட்டுகளுடன் பரிதவிப்புக்குள்ளான மூதாட்டிகள்

திருப்பூர்: கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது தெரியாமல் 500, 1000 கொண்ட 46 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுக்களுடன் மூதாட்டிகள் தங்களது கண்புரை அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (78). இவர்கள் இருவரும் சகோதரிகள். இவர்களின் கணவர்கள் இறந்துவிட்டனர். இதனால் மூதாட்டிகள் தங்களது மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். 2 பேருக்கும் கண் சரிவர தெரியாததால், இருவரும் கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கண்புரை உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் செலவாகும் என கூறியுள்ளனர். அப்போது பண மதிப்பு நீக்க விவகாரம் தெரியாமல் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரங்கம்மாள் 24 ஆயிரம், தங்கம்மாள் 22 ஆயிரம் பணத்தை குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகள் அனைத்தும், செல்லாத 500, 1000 நோட்டுகளாகும். இதனை பார்த்த மூதாட்டியின் குடும்பத்தினர் கடும் வேதனையடைந்தனர்.

இதுகுறித்து மூதாட்டிகளிடம் கேட்டபோது, ‘‘எங்கள் கணவன்மார்கள் கடைசி காலத்தில் வெள்ளாடுகளை விற்பனை செய்து அந்த பணத்தை எங்களிடம் கொடுத்து வைத்தனர். அவர்கள் இறந்தபின்பு எங்களின் செலவுகளுக்கு பணத்தை பயன்படுத்தி வந்தோம். 500, 1000 நோட்டுகளை எடுக்கவில்லை. தற்போது மருத்துவமனைக்கு பணம் தேவைப்படுவது தெரிந்து சேமித்து வைத்த பணத்தை மகன்களிடம் கொடுத்தோம். இந்த நோட்டுகள் செல்லாது என அவர்கள் கூறிய பின்புதான் எங்களுக்கு தெரிய வந்தது’’ என்று வேதனையோடு கூறினார்கள். இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016ல் பண மதிப்பிழப்பு செய்தது. மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட கால அவகாசம் அளித்தது. அந்த காலகட்டத்தில் நோட்டுகளை மாற்றியிருந்தால் செல்லும். ஆனால் தற்போது அந்த பணத்தை மாற்ற இயலாது என கூறினார்.

Tags : Ancestors , Inundated ,46,000 invalid savings,deflation action
× RELATED மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்?