×

வெளிப்புற காற்றை விட அதிக பாதிப்பு 38 லட்சம் பேரை பலி வாங்கிய வீட்டுக்குள் இருக்கும் காற்று மாசு

சேலம்: வீட்டிற்குள் இருக்கும் மாசுக்காற்றால் கடந்த 2016ல் மட்டும் உலக அளவில் 38 லட்சம் பேர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் தற்போது காற்று மாசு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பிறகு தேவையற்ற வைக்கோலை எரிப்பதே காற்றுமாசு அதிகரிக்க முக்கிய காரணம் என்று தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெளிப்புற மாசுக்காற்றால் இறப்பவர்களின் எண்ணிக்ைக, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே சுவாசிக்க உகந்த காற்று இருந்துள்ளது. காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுள் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் வரை குறைகிறது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வுகளில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் காற்று மாசு காரணமாக 8ல் ஒருவர் உயிரிழக்கின்றனர். ஒரு வருடத்திற்கு 70 லட்சம் பேர் இறக்கின்றனர். குழந்தைகள் 9 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக நுரையீரல் புற்றுநோயால் 25 சதவீதம் ேபரும், நுரையீரல் நோய்த்தொற்றால் 17 சதவீதம் பேரும், பக்கவாதத்தால் 16 சதவீதம் பேரும், இதயநோயால் 15 சதவீதம் பேரும், நுரையீரல் அடைப்பு நோயால் 8 சதவீதம் பேரும் இறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளிப்புற காற்றை விட, வீட்டிற்குள் இருக்கும் மாசு காற்றால் உடலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து சேலம் மருத்துவர்கள் கூறியதாவது: இன்றைய சூழலில் ஒருவர் வீட்டிலும், அலுவலகத்திலும் சுவாசிக்கும் காற்றில் கூட அதிக மாசு காணப்படுகிறது. வெளிப்புற மாசுக்கு எந்த விதத்திலும் குறையாத நிலையில் உட்புற மாசு உள்ளது. உட்புற மாசுபாட்டைப் பொறுத்தவரையில், மற்றவர்களைவிட சுவாசப் பிரச்னைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். பூட்டிய இடங்களில் அதிக நேரம் இருக்கக்கூடாது.

உலகளவில் வீட்டு காற்று மாசுபாடு சுற்றுச்சூழல், சுகாதார பிரச்னையாக உள்ளது. வீட்டில் சமையல், விளக்குகள் போன்றவற்றினால் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர அளவில் உள்ள நாடுகளில் உலகின் 41 சதவீதத்தினர் மாசுபடுத்தும் எரிபொருட்களை முக்கியமாக சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக வீட்டு காற்று மாசுபாட்டால் கடந்த 2016ல் 38 லட்சம் மக்கள்  உயிரிழந்துள்ளனர். இதில் 5 வயதுக்குட்பட்ட 4 லட்சம் குழந்தைகளும்  இறந்துள்ளனர். உட்புற மாசுபாட்டில் இருந்து விடுபட, அனைவரும் இயற்கையை நோக்கி திரும்ப வேண்டும். இதற்காக வீட்டை சுற்றியும், வீட்டிற்குள்ளேயும் செடிகள் வைப்பதும், வளர்ப்பதும்தான் சிறந்தது. மாசான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் மட்டுமின்றி கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம், இதயம், மண்ணீரல் என உடலின் அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும். மாசு காற்றை சுவாசிக்கும் போது ஆஸ்துமா போன்ற பிரச்னைகளில் ஆரம்பித்து புற்றுநோய் வரையில் பல்வேறு தீவிர பாதிப்புகள் ஏற்படுத்த கூடும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்.

Tags : home , Air pollution, home, 38 lakh people killed
× RELATED காற்று மாசு காரணமாக டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியா