×

நேர்மை இல்லையானால் நடவடிக்கை: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமில்லை...மத்தியமைச்சர் ஜிதேந்திரா பதில்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மக்களவையில் அரசு விளக்கமளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. மத்திய அரசின்  மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெறும் வயது 65 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மையை சமாளிப்பதற்கு மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்கு பணியாளர்கள்  மற்றும் பயிற்சி துறை முடிவெடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. 60 வயதை அடைந்தவர்கள் அல்லது 33 வருட சேவையை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வு பெற வேண்டும். இதில் எது முதலில் வருகிறதோ, அதன்படி  ஓய்வைக் கணக்கில் கொள்ள வேண்டும் என விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சமூகவலைத்தங்களில் பரவும் தகவலில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் பரிந்துரை தற்போது நிதிக் கணக்கீடுகளுக்காக செலவீனத் துறையின் வசம் உள்ளது. ஒருவேளை, இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட அளவிற்கு வேலையின்மை பிரச்னையை இது சரி செய்யும், எனவும்  சமூகவலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தவறான செய்தி குறித்து எம்.பி-க்கள் கெளஷல் கிஷோர் மற்றும் உபேந்திரா சிங் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா, 60 வயதிலிருந்து 58 வயதாக ஓய்வு வயதைக் குறைக்க எண்ணமில்லை. அதேபோல் 50 வயது ஆன மத்திய அரசு ஊழியர்களை கட்டாயப் பணி நீக்கம் செய்யும் எண்ணமும் இல்லை.  ஆனால், நேர்மை இன்மை, திறன் இன்மை ஆகியவற்றின் கீழ் ஒரு பணியாளர் ஓய்வு வயதுக்கு முன்னரே பணியிலிருந்து நீக்கப்படலாம். அதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பிய பின்னர்தான் செய்யப்படும்” என்று  விளக்கம் அளித்தார்.

மேலும், குருப் ஏ மற்றும் குருப் பி பணியில் உள்ள ஊழியர்கள் 35 வயதுக்க முன்பே பணியில் சேர்ந்திருந்தால், அவர்கள் 50 வயதை எட்டியிருந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம். மற்றவர்களுக்கு 55 வயதை எட்டிய பின் இந்த  நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பதில்:

இதற்கிடையே, மக்களவையில் எம்.பி. ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 70 ஆக உயர்த்துவது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா? என கேள்வி  எழுப்பினார். மேலும், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான கால வரம்பு 33 ஆண்டுகள் பணி சேவை அல்லது 60 வயது என்ற புதிய கருத்துருவை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைதானா  எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 70 ஆக அதிகரிப்பது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை  செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். ஊழியர்களின் பணி காலத்தை 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது, இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு என கொண்டுவர அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்  பதிலளித்துள்ளார்.   


Tags : government ,Jitendra , Action to curtail retirement age of central government employees: Jitendra
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...