×

பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும் SPG சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது: எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு!

புதுடெல்லி: எஸ்.பி.ஜி  எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை திருத்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிரதமருக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கும் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. SPG மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். சோனியா, ராகுல், பிரியங்காவிற்கு SPG பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர். ஆனால் கடந்த 8-ம் தேதி முதல் முறையாக அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், இனிமேல் எஸ்பிஜி பாதுகாப்பு என்பது பிரதமருக்கு மட்டும் வழங்கப்படும். அவர்கள் குடும்பத்தினர் பிரதமருடன் அவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்தால் மட்டுமே வழங்கப்படும் உள்ளிட்ட திருத்தங்களுடன் சிறப்பு பாதுகாப்பு திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா மீதான விவாதம்:

காங்கிரஸை சேர்ந்த மனீஷ் திவாரி, அச்சுறுத்தலை வைத்தே பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அரசியல் காரணங்கள் முக்கியமல்ல; கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லையா? ஆகவே அதையும் எடுத்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்றார். மேலும் கொலைகாரர்கள் பாதுகாப்பு அகற்றப்படும் வரை காத்து கொண்டிருப்பார்கள் என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் அவர் இப்போது உயிருடன் இருந்திருப்பார் என்றும் அவர் வாதிட்டார்.

ஆ.ராசா விவாதம்: இதன் மீதான விவாதம் நடைபெற்ற போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி ஆ.ராசா கூறியதாவது, எஸ்.பி.ஜி. சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்  என வலியுறுத்தியுள்ளார்.

அமித்ஷா பதில்: 
அதற்குப் பதிலளித்த அமித் ஷா, முன்பு இருந்த எஸ்பிஜி மசோதாவின் அசல் தன்மையை இது மீட்டெடுக்கும் என்றும் முந்தைய அரசு கொண்டு வந்த சட்டம் நீர்த்து போனது என்றும் அவர் பதிலளித்தார்.

எஸ்.பி.ஜி மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு:

எஸ்.பி.ஜி. திருத்த சட்டம் காரணமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, ராகுலுக்கு பாதுகாப்பு குறைக்கப்படும் என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஜி திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அமித்ஷா விளக்கம்:

சோனியா காந்தி குடும்பத்திற்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கவில்லை என அமித்ஷா விளக்கம் தெரிவித்துள்ளார்.  சோனியா குடும்பத்திற்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டின் பேரில் பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி குடும்பத்தினர் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

விவாதங்களின் இறுதியில் பிரதமருக்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கும் சட்டத் திருத்த மசோதா பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.



Tags : SPG ,Lok Sabha ,Congress ,protests , SPG Bill, SPG, Lok Sabha, Executive, Congress, Walk
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...