×

சித்தூர் மாவட்ட திட்ட இயக்குனரை பணிநீக்கம் செய்து உத்தரவிடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை சங்கமித்ரா ஊழியர்கள் முற்றுகை

சித்தூர்: சித்தூர் மாவட்ட இயக்குனரை பணிநீக்கம் செய்து உத்தரவிடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சங்க மித்ரா ஊழியர்கள் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். சங்கமித்ரா ஊழியர்கள் திட்ட இயக்குனர் முரளியை பணியிடை நீக்கம் செய்ய முதல்வர் உத்தரவிடக்கோரி நேற்று சித்தூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கங்கராஜ் தலைமை தாங்கி முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சங்க மித்ரா ஊழியர்கள் 250 ரூபாய் முதல் பணிபுரிந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி சங்கமித்ரா ஊழியர்களுக்கு சம்பளமாக ₹1500 வழங்கினார்.

இந்நிலையில் 2013ம் ஆண்டு முன்னாள் முதல்வர் சந்திரபாபு தேர்தலுக்கு முன்பு ஆந்திர மாநிலம் முழுவதும் பாதை யாத்திரை மேற்கொண்டபோது சங்கமித்ரா ஊழியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பதவி ஏற்ற உடன் சங்கமித்ரா ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கினார். இந்நிலையில் கடந்த ஆண்டு  தேர்தலுக்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் பாத யாத்திரை மேற்கொண்ட போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி செய்யும் சங்கமித்ரா ஊழியர்களுக்கு ₹10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில் கடந்த மாதம் சங்கமித்ரா ஊழியர்களுக்கு அரசாணை 669ன் படி ₹10 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். இதனால் சங்கமித்ரா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சித்தூர் மாவட்ட டிஆர்டிஏ திட்ட இயக்குனர் முரளி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் சங்கமித்ரா ஊழியர்களின் பணியிலிருந்து நீக்கபடுவதாகவும், அதேபோல் 40 வயதை தாண்டியவர்களும் பணி நீக்கம் செய்வதாகவும், அதுமட்டுமல்லாமல் ஆண்களை பணி நீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களில் சங்கமித்ரா ஊழியர்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் 12 மாவட்டங்களில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த திட்ட இயக்குனர்கள் இதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால் சித்தூர் மாவட்டத்தில் மட்டும் திட்ட இயக்குனர் முரளி  இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் அறிவித்த அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் முதல்வர் ஜெகன்மோகன் திட்ட இயக்குனர் முரளியை பணிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.

இதனை கண்டித்து நாளை(இன்று) ஆந்திர மாநில பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியின் வீட்டின் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கமித்ரா ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த 2வது காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  கேசவா  ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றார். அதன் பின்னர் 2 மணி நேரம் கழித்து அனைவரையும் விடுவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sangamitra ,District Collector ,Chittoor Siege , Siege
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...