×

'மீண்டும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்' : புவிவட்டப் பாதையில், கார்டோசாட்-3 வெற்றிகரமாக நிலை நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து

டெல்லி : புவிசுற்றுவட்டப் பாதையில், கார்டோசாட்-3 வெற்றிகரமாக நிலை நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை ஏவுவதற்கான 26 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இன்று மிகச்சரியாக காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்தியாவின் புவி மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 உட்பட 14 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் பாய்ந்து சென்றது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் பாய்ந்தபோது, அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள், 3டி முறையிலான கிராபிக்ஸ் மற்றும் படக்காட்சிகளும் விவரித்தனர்.

புவி ஆய்வுகளுக்கு உதவுவதற்காக, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்டோசாட் என்று அழைக்கப்படும் செயற்கைகோள்களை கடந்த 2005ம் ஆண்டு முதல், இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 8 கார்டோசாட் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், 9வது செயற்கைக்கோளாக கார்டோசாட் - 3 எனும் தொலை உணர்வு செயற்கைகோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.ஆயிரத்து 625 கிலோ எடையிலான கார்டோசாட்-3 செயற்கைகோள், தரையிலிருந்து, 509 கிலோ மீட்டர் தொலைவில் புவிசுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானவுடன், இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் உற்சாகமடைந்தனர்.

 பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இந்நிலையில் புவிசுற்றுவட்டப் பாதையில், கார்டோசாட்-3 வெற்றிகரமாக நிலை நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,”பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அதிநவீன கார்டோசாட் செயற்கைக்கோள், மிக அதிக தெளிவுடன் பூமியைப் படம்பிடிக்கும் இயல்புடையவை. கார்டோ சாட் இ்ன்னும் மேம்படுத்தப்பட்ட படங்களை எடுத்து சிறந்த ஆராய்ச்சிக்கு உதவும். இஸ்ரோ மீண்டும் நமது தேசத்துக்கு பெருமை சேர்த்து தந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.


Tags : scientists ,Modi ,ISRO , ISRO, Scientists, Cardosat-3, Prime Minister, Narendra Modi, BSLV C-47 Rocket, Twitter
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு