×

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பாக்தாதியை பிடித்த ராணுவ நாய்க்கு விருது: அமெரிக்க அதிபர் டிரம்ப் கவுரவம்

வாஷிங்டன்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதியை கண்டுபிடித்து கொல்வதற்கு காரணமாக இருந்த ராணுவ மோப்ப நாய் கோனானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருது வழங்கி கவுரவித்துள்ளார். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் பதுங்கி இருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி (48) கடந்த மாதம் அமெரிக்க சிறப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டான். அப்போது சுரங்கத்தில் மறைந்திருந்த பாக்தாதியை ராணுவ நாய் கோனான் கண்டறிந்து விரட்டி சென்றது. இதனால், பாக்தாதி தன்னிடம் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்து குடும்பத்தோடு உயிரிழந்தான். இந்த தாக்குதலில் கோனானும் காயமடைந்தது. சிகிச்சைக்கு பின்னர் அது பணிக்கு திரும்பியது.

இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு நேற்று முன்தினம் கோனான் அழைத்து வரப்பட்டது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அலுவலகத்தில் அதை  பார்வையிட்டார். அதிபரின் மனைவி மெலானியா, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது, பாக்தாதியை கொல்ல உதவிய கோனானை டிரம்ப் கவுரவித்தார். அதனை உலகிலேயே மிகவும் பிரபலமான நாய் என்றும், மிகவும் புத்திசாலி என்றும் டிரம்ப் புகழ்ந்தார்.

தொடர்ந்து அதிபர் டிரம்ப், பாக்தாதியை பிடிக்கும் திட்டத்தை  நடத்தி முடித்த சிறப்பு படையினரையும் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். ஆனால், இவர்கள் வெளிப்படையாக காண்பிக்கப்படவில்லை. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், “ பாக்தாதி உயிரோடு இல்லை. ஆனால், இது ஒரு குறைபாடற்ற தாக்குதல். வீரர்களை சந்தித்தேன். கோனானுக்கு விருது வழங்கினேன். வீரர்கள் மற்றும் கோனான் அருமையான பணியை செய்து முடித்துள்ளனர். கோனான் ஓய்வு பெறாது. நீண்ட ஆண்டுகள் சேவையாற்றும்,” என்றார்.


Tags : Trump ,President ,Baghdadi ,US ,Baghdad , IS Terrorist Movement Leader, Baghdadi, Military Dog, Award, US President Trump, Hon.
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...