×

தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது மாலியில் நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: பிரான்ஸ் வீரர்கள் 13 பேர் பலி

பாரிஸ்: மாலி நாட்டில் நடுவானில் இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான மாலியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிரித்து வந்தது. மாலியின் வடக்கு பகுதியில் பெரும்பாலான பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதையடுத்து, மாலி அரசுக்கு துணையாக பிரான்ஸ் ராணுவம் அங்கு தனது வீரர்கள் 4500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.  

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த நாட்டின் சஹேல் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் வீரர்கள் போரில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு ஹெலிகாப்டர்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இதில் பிரான்ஸ் வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார். விபத்தில் இறந்த பிரான்ஸ் வீரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மேக்ரான் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் சஹேல் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிர்தியாகம் செய்த பிரான்ஸ் வீரர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். விபத்து குறித்து பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லே கூறுகையில், விபத்து எந்த சூழ்நிலையில் நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக’ தெரிவித்தார். கடந்த 2 மாதங்களில் மாலியில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 100 உள்ளூர் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Tags : militants ,Mali ,French ,helicopters clash ,France , Fighting with militants, fighting in Mali, helicopters, France soldiers, 13 killed
× RELATED பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம்...