×

கேரள வனப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடல் 30 நாளுக்கு பிறகு தகனம்

கோவை: கேரள வனப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்  அரவிந்தின் உடல் கோவையில் நேற்று தகனம் செய்யப்பட்டது.கேரள  மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28ம்  தேதி  கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவான தண்டர்போல்ட் போலீசார்  நடத்திய   துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட்கள் மணிவாசகம்(50),   புதுக்கோட்டை  கார்த்திக் (35), நாகர்கோவில் ரமா (27), சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (எ) சீனிவாசன் (30) ஆகிய 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பியோடிய தீபக்கை தமிழக சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர்.  மேலும்  2 பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.   போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான மாவோயிஸ்ட்களின் உடல்  திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பிரேத பரிசோதனை  கூடத்தில்  வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் 4 பேரின் உடலையும் அடக்கம் செய்யலாம் என்று உத்தரவிட்டது. மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்  என்று போலீசாரை  அறிவுறுத்தியது.

இதனைத்தொடர்ந்து மணிவாசம், கார்த்திக் ஆகியோரது உடல் உறவினர்களிடம்   ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த அஜிதாவின் உடலை உறவினர்கள்  யாரும் வாங்க  முன்வரவில்லை.  இதையடுத்து போலீசார் திருச்சூரில் அஜிதாவின் உடலை கடந்த 21ம் தேதி தகனம் செய்தனர். அரவிந்தின் உடல் தொடர்ந்து திருச்சூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று  உறவினர்கள் அவருடைய உடலை பெற்று கொண்டனர். சென்னைக்கு கொண்டு சென்றால்  ஏதேனும் பிரச்னை ஏற்படலாம் என்ற  காரணத்தாலும், பாதுகாப்பு கருதியும் அவருடைய உடலை கோவையில் தகனம் செய்ய  முடிவு  செய்யப்பட்டது. அதன்படி  பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் நேற்று மதியம் 2 மணிக்கு திருச்சூரில் இருந்து ஆம்புலன்ஸ்  மூலம் அரவிந்த் உடல் கோவை  கொண்டுவரப்பட்டது. நஞ்சுண்டாபுரத்தில் உள்ள  மின் மயானத்தில் 3 மணிக்கு   தகனம் செய்யப்பட்டது. அஸ்தியை  அரவிந்தின்  அண்ணன்  ராஜகோபால்  பெற்று கொண்டார்.



Tags : Kerala ,Kerala Forest Maoist , Killed,Kerala forest, Maoist body ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...