×

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில்  கடல் சீற்றத்தினால் அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை செல்லும்  தேசிய நெடுஞ்சாலையின் முனையில் சிங்கமுக தூணுடன் கூடிய ரவுண்டானா வளைவு  அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிச்சல்முனை பகுதியில்  ஏற்பட்ட  கடல் அரிப்பால் கான்கிரீட் ரவுண்டானா தடுப்பு சுவர் சரிந்து சேதமடைந்தது.  இதனால் அரிச்சல்முனைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை  விதிக்கப்பட்டது. கடலரிப்பில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்ட நிலையில்,  கடந்த வாரம்தான் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  இதனால் தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனை கடற்கரை  ரவுண்டானா வரை,  சென்று கடலுக்குள் உள்ள மணல் திட்டுகளை பார்வையிட்டு  திரும்பினர். மன்னார் வளைகுடா கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள  நிலையில், கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தனுஷ்கோடி பகுதியில் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ரவுண்டானாவின் தடுப்பு சுவர் வரை கடல் அலைகள்  வந்து செல்வதால், தடுப்பு சுவர் வரை மணல் அரிப்பும்  ஏற்பட்டு வருகிறது. ரவுண்டானா சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் உடையும் அபாயத்தில் உள்ளது.

 இதனால்  நேற்று பகல் 12 மணிக்கு மேல் அரிச்சல்முனை கடற்கரைக்கு, சுற்றுலாப்பயணிகள்  மற்றும் பக்தர்கள் செல்ல போலீசார் தடை விதித்து தீவிர பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர். சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களும் தனுஷ்கோடிக்கு  கொண்டு  செல்ல அறிவுறுத்தப்பட்டது. நிலைமை சீராகும் வரை தனுஷ்கோடி வரை மட்டுமே  இனிமேல் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு: ராமேஸ்வரம், கிழக்காடு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் அலெக்ஸ் (35), குமார் (35), ஜான்கோபி (34), நாகூர் மீரான் (45) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு  சென்றனர். இரவு 8 மணியளவில் நடுக்கடலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவர்களது படகு கடலில் மூழ்கியது.  நால்வரும் கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்,  4 பேரையும் மீட்டு தங்களது படகில் ஏற்றி நேற்று அதிகாலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

Tags : Dhanushkodi Tourists ,Dhanushkodi , Sea rage , Dhanushkodi, Arihalmunai
× RELATED தொடர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை