×

தெலங்கானாவில் ஸ்டிரைக் வாபஸ் ஆன நிலையில் பணிக்கு திரும்பிய பேருந்து ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு: தடை மீறி செல்ல முயன்றவர்கள் கைது

திருமலை: தெலங்கானாவில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய போக்குவரத்து ஊழியர்கள் பணி செய்ய அனுமதி மறுக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி பணிமனைக்குள் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலத்தில் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 52 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு நேற்று முதல் பணிக்கு திரும்ப முடிவு செய்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்திற்கு பின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அஸ்வத்தாமா கூறுகையில், ‘‘பணிக்கு திரும்பும் போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்  கூடாது. எங்களது கோரிக்கைகளை அரசு பரிவுடன் கவனிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் போராட் டத்தை கை விட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும் நேற்று பணியில் சேருவதற்காக தங்கள் பணிமனை முன் குவிந்தனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள்,  ‘‘உங்களை பணியில் சேர்ப்பது குறித்து எந்த  அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடவில்லை. யாரையும் பணியில் சேர்க்க முடியாது’’ எனக்கூறி பணிமனை வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

ஆனால், ‘அனுமதியின்றி பணிமனைக்குள் சென்றாலோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனாலும் தடையை மீறி ஊழியர்கள் செல்ல முயன்றனர். இதனால்  ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் தடையை மீறி பணிக்கு செல்ல முயன்ற போக்குவரத்து ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தடுக்க அனைத்து  பணிமனைகள் முன்  இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்தில் பெண் இன்ஜினியர் பலி
ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நேற்று அரசு போக்குவரத்துக்  கழக பஸ்சை தற்காலிக டிரைவர் இயக்கினார். அப்போது அவ்வழியாக பைக்கில்  சென்று கொண்டிருந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் சஹானி என்ற  பெண் மீது பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரசின்  அலட்சியத்தின் காரணமாகவே தற்காலிக டிரைவர்கள்  வாகனத்தை ஓட்டி  விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாக கூறி பொதுமக்கள்  பஸ் மீது கல்வீசி   தாக்குதல் நடத்தினர். மேலும் டிரைவரையும் சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து  அங்கு வந்த போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் இருந்து டிரைவரை மீட்டு  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


Tags : Strike withdrawal ,bus operators ,withdrawal , Strike,Telangana, Permission , bus operators,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...