×

பின்லாந்து கல்விக்குழு சென்னையில் பயிற்சி

சென்னை: உலக அளவில் பின்லாந்து நாடு கல்வியில் முன்னணியில் உள்ளது. அந்த நாட்டின் கல்வியின் தரத்தை அறியவும், அங்கு கற்பிக்கும் முறையை நேரில் காணவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் பின்லாந்து சென்று வந்தார். இந்நிலையில், பின்லாந்து நாட்டின் 6 பேர் கொண்ட கல்விக்குழு ஒன்று நேற்று சென்னை வந்தது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் அந்த குழுவினர் தமிழகத்தில் உள்ள 150 ஆசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடினர்.

சென்னை டிபிஐ வளாத்தில் நடந்த இந்த கலந்துரையாடலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களை சேர்ந்த 100  ஆசிரியர்கள் பங்கேற்றனர். பின்லாந்து நாட்டின் கல்விக்குழுவினர் அந்த ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர் ஆசிரியர்களிடம் கலந்துரையாடி கருத்துகளை கேட்டனர். தொடர்ந்து பின்லாந்து நாட்டு கல்விக்குழுவின் தலைவர் வில்லிடஜாமா கூறியதாவது:
தமிழக அரசின் கல்வி கற்பிக்கும் முறை பாராட்டும் வகையில் உள்ளது. மாணவர்களை மையப்படுத்தி கல்வி முறையை பின்பற்றினால் ஆசிரியர்கள், மாணவர்களின் தனித் திறன்களை கண்டறிந்து ஊக்கப்படுத்த வழிவகை ஏற்படும்.

மேலும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவது கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும். மாணவர்களின் திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் புதிய கற்றல் வழிமுறைகளை ஏற்படு்த்த வேண்டும் என்றார். இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையர் சிஜிதாமஸ்வைத்யன் கூறியதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 மதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான கற்றல் முறையை அறிமுகப்படுத்துவது, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தொழில் சார்ந்த கல்வியை வழங்குவது குறித்து 150 ஆசிரியர்களுக்கும் பின்லாந்து  குழுவினர் பயிற்சி அளிக்க உள்ளனர் என்றார்.

Tags : Finland Education Group Training ,Chennai , Finland, Board of Education, Madras, Training
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...