×

கோட்டூர்புரத்தில் பொழுதுபோக்கு பூங்கா மியாவாக்கி முறையில் காடு வளர்க்கும் திட்டம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் மியாவாக்கி முறையில் காடு வளர்க்கும் திட்டத்தின் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கொண்டு வரும் திட்டம் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூவம், அடையாறு ஆறுகள் தூர்வாரப்பட்டு வெள்ளத்தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் கரையோர பகுதிகளில் உள்ள மக்களை மறுகுடியமர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை கோட்டூர்புரத்தில் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது. 23,340 கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த பூங்காவில் நடைபாதை, சைக்கிள் பாதை, குழந்தைகளுக்கான விளையாடுவதற்கான கூடம், உணவகங்கள் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. பூங்காவின் உள்பகுதியில் பல்வேறு மரங்கள் நடப்பட உள்ளது. இந்த இடத்தில் பூங்கா அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி உள்பட பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி பணிகள் துறை துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூங்கா துறை தலைமை பொறியாளர், கண்காணப்பு பொறியாளர் உள்ளிட்ட மாநகராட்சி பொறியாளர்கள் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

சென்னை மாநகரட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-172, கோட்டூர்புரம் பறக்கும் இரயில் நிலையம் அருகில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் நிலத்தில்  நகர்புற காடுகள் (அர்பன் பாரஸ்ட்) முறையில் அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்கப்படவுள்ளது.
மியாவாக்கி நகர்புற காடுகள் முறையில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப 30 டஜன் நாட்டுப்புற வகை மரங்களை வளர்க்கலாம். இம்முறையில் வளர்க்கப்படும் மரங்கள் சாதாரண மரங்களை விட 10 மடங்கு அதிக வளர்ச்சியும், 30 மடங்கு அதிக அடர்த்தியும் கொண்டதாக இருக்கும். மேலும், இம்முறையில் வளர்க்கப்படும் மரங்களுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு பிறகு எந்தவொரு பராமரிப்பு பணிகளும் தேவைப்படாது.

இதனால் நகர்புற மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மாசு குறைந்து காற்றின் தூய்மை மேம்படும் சூழ்நிலை உருவாகும். இந்த நிலத்தில் புங்கை, பூவரசம், வேப்ப மரம், மற்றும் சில அரிய வகை மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான உரங்கள் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மண்டலம்-11 முதல் 15 வரை இயங்கி வரும் பல்வேறு உரம் தயாரிக்கும் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டத்தின் மியாவாக்கி பசுமை காடுகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.


Tags : Amusement park ,commissioner ,forest plantation ,Koturpuram Miyawaki , Koturpuram, Amusement Park, Miyawaki System, Forestry Project, Corporation Commissioner, Information
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...