×

அரிசி அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: ‘‘இந்த ஆண்டிலும் அரிசி அட்டைதாரர்களுக்கு 1000 வழங்கப்படும். இதுதவிர, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி சாமியார் மடம் மைதானத்தில் ேநற்று நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வருவாய்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார், சட்டதுறை அமைச்சர் சிவி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார்.  அரசு கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்கவுரையாற்றினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென  15 ஆண்டுகாலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படியே  கள்ளக்குறிச்சி தலைமையிடமாக கொண்டு  புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது.

 விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும் வகையில், திண்டிவனத்தில் உணவு பூங்கா விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும்  10 மாவட்டங்களில் மார்க்கெட் தொடங்கப்பட உள்ளன. இதன்காரணமாக அந்தந்த  பகுதி  விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
 உளுந்தூர்பேட்டை பூட்டை கிராமத்தில் தடுப்பணை கட்டப்படும். சூரிய மின் திட்டத்தின்கீழ் மின் மோட்டார் அமைக்க மானியத்தில் உதவி தொகை வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்துக்கு 100  சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி-சேலம் மாவட்ட எல்லையில் ரூ.1000 கோடி செலவில் உலகதரம் வாய்ந்த கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.  தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. வாக்குறுதி கொடுக்காத திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்.

தைப்பொங்கல் திருநாளன்று தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு அரிசி அட்டை தாரர்களுக்கு தலா 1000 வழங்கியதுபோல், இந்த ஆண்டிலும் அரிசி அட்டைதாரர்களுக்கு 1000 வழங்கப்படும். மேலும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.  இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.      கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட 5873 பயனாளிகளுக்கு 23 கோடியே 58 லட்சம்  மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.  தொடர்ந்து வருவாய்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளி கல்வித் துறை, நெடுஞ்சாலைதுறை, கால்நடைதுறை ஆகிய துறைகளில் 466 பணிகளுக்கு 194 கோடியே 81 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டினார்.


Tags : inauguration ,Edappadi Palanisamy ,Chief Minister ,Rice Cardholders ,Edappadi Palanisamy Announces ,Kallakurichi District Pongal ,district ,Kallakurichi , Rice Card, Pongal Gift, Kallakurichi District, Chief Minister Edappadi Palanisamy
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...