×

மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு பறிபோனதை அறியாத எடப்பாடி அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: எடப்பாடி அரசுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், நூறாண்டுகளுக்கு முன்பே, சமூக நீதி கொள்கைக்கு விதையிட்டு வளர்த்த இயக்கம்தான் திராவிட அரசியல் இயக்கமான நீதிக்கட்சி. அதன் ஆட்சிக்காலத்தில் ‘கம்யூனல் ஜி.ஓ’ என்கிற வகுப்புவாரி உரிமை அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.  இதை தடுக்கும் நோக்கத்தோடு, குடியரசான இந்தியாவில், செண்பகம் துரைராஜ் பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றங்கள், இந்த வகுப்புவாரி உரிமையை செல்லாது என அறிவித்து உத்தரவிட்ட நிலையில், சமூகநீதியைக் காப்பாற்றும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என தமிழகமே போர்க்கோலம் பூண்டது. திராவிட இயக்கங்களான தி.க. மற்றும் திமுக ஆகியவை இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக அறப்போர்க்களத்தில் இறங்கின. இதனால், காமராஜர், அன்றைய பிரதமர் நேருவிடம், தமிழக எழுச்சியை எடுத்துரைத்த பிறகு, 1951ல் இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டது.  இடஒதுக்கீடு நிலைபெற்றது.

திமுக தொடங்கப்பட்ட 2வது ஆண்டிலேயே இப்படி வெற்றி போராட்டம்தான், நமது சமூகநீதி வரலாற்று பயணம். 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, அண்ணாமறைவுக்குப் பிறகு, 1969ல் கருணாநிதி முதல்வரான பிறகு, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்ட வலுச்சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.  பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்படுவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வாய்ப்புகளுக்காக, சட்டநாதன் கமிஷன் அமைக்கப்பட்டது. பிறகு, கருணாநிதி எடுத்த  முயற்சியால் அதுவரை 25 சதவீதம் என இருந்த, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு, 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 16 சதவீதம் என்று  இருந்த, பட்டியலின இடஒதுக்கீடு 18 சதவீதமாக  உயர்த்தப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் திமுக படைத்த சாதனை இது.
அதன்பிறகு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கொண்டு வந்தார். அதை எதிர்த்து தி.க, திமுக, சமூகநீதி சக்திகள் போராட்டம் நடத்தின. அதனால், 1980 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகுதான் வருமான வரம்பை நீக்கி, 31 சதவீதமாக இருந்த, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்தினார்.

1989ஆம் ஆண்டு, தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக அரசு 3ம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போதுதான், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 30 சதவீதம் உறுதி செய்து, மீதி 20 சதவீதத்தை பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உண்டாக்கி இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 18% முழுமையும் பட்டியல் இனத்திற்கும், பழங்குடியினருக்கு தனியாக 1 சதவீத இடஒதுக்கீடும் வழங்கி ஆணையிட்டு நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி. இதுதான் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் வரலாறு. உச்சநீதிமன்றதில் உள்ள வழக்குகளால் இன்றும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தவேண்டியுள்ளது.  இத்தகைய போராட்டங்களுக்கு நடுவிலும், 69 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பிற்குள்ளாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30% ஒதுக்கீட்டில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு 3.55 தனி ஒதுக்கீடும், பட்டியல் இனத்தவருக்கான 18% ஒதுக்கீட்டில் அருந்ததிய சமுதாயத்தினருக்கு 3% உள்ஒதுக்கீடும் வழங்கியவர் கருணாநிதி.   

இடஒதுக்கீடு வரலாறு பற்றி அக்கறையில்லாமல், உண்மை விவரங்களை அறியாமல், “சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம்” என,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். மருத்துவக் கல்விக்கான பட்ட மேற்படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பறிபோயிருப்பதையே அறியாத, நீட் எனும் கொடுவாளால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோவதை அறியாத முதலமைச்சர் இவ்வாறு பேசியிருக்கிறார். மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த மருத்துவக் கல்வியையும் பறித்து, அதிலும் இடஒதுக்கீடு இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. இவரது அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சமூகநீதி காக்கும் அரணாக திமுக எப்போதும் திகழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் சிறப்பு மிக்க தீர்ப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட நாளான இன்று சட்ட நெறிமுறைகளில் தளராத நம்பிக்கை கொண்டோர் எதிர்பார்த்த வண்ணம், சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் கட்சி அரசியல் லாப நோக்கத்துடன், விபரீத விளையாட்டு நடத்தும் மத்தியில் உள்ள பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் அவர் பதிவிட்டிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்ட நாளில், நம்முடைய அரசியலமைப்பை உருவாக்கிய மேதைகளை நினைவுகூர்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டாட்சி முறை குறித்து ஒரு சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தேன். இன்று மத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளவாறு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : state ,MK Stalin , Medical Education, Reservation, Edappadi Government, MK Stalin
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...