தமிழக சிறைகளில் இருந்து பரோலில் சென்ற 200 கைதிகள் தலைமறைவு: கண்டறிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுமா?

சிறப்பு செய்தி

தமிழக சிறைகளில் இருந்து பரோலில் சென்ற 200 கைதிகள் மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை. அவர்களை கண்டறிந்து கைது செய்ய சிறப்பு விசாரணை குழு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் சுமார் 13 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 2500க்கும் மேற்பட்டவர்கள் தண்டனை கைதிகள். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளாள நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு பரோல் வழங்கப்பட்டது. நீதிமன்றம் மூலமாகவும், சிறை அதிகாரிகள் மூலமாகவும் இந்த பரோல் வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜனின் மறைவுக்கு பரோலில் வந்து சென்றார். கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோருக்கும் நீதிமன்றம் பரோல் வழங்கியது.

தண்டனை  அனுபவித்து வரும் கைதிகளாக இருந்தாலும், விசாரணை கைதிகளாக இருந்தாலும்  நல்ல நடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு பரோல் வழங்கப்படுவது வழக்கம். சிறை கண்காணிப்பாளர் ஒரு வருடத்திற்கு 15 நாள் வரை பரோல் வழங்கலாம். சிறை டிஐஜி 2 ஆண்டுக்கு ஒரு மாதமும், அரசு நினைத்தால் எவ்வளவு நாளும் பரோல் வழங்கலாம். பரோல் என்பது சிறை கைதியின் குடும்பத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அதாவது, குடும்பத்தில் மரணம், திருமணம், புதியவீடு கட்டுதல், விவசாயம் செய்தல், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் முக்கிய உறவினர்களை சந்திக்க பரோல் என்ற விடுமுறை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் கைதிகளுக்கு பரோல் வழங்கப்படுகிறது. ஆனால் கொண்டாட்டத்திற்காக அனுப்பப்படுவது இல்லை. அந்த நாட்களில் குடும்பத்தினரை பார்க்கவே இந்த சிறைவாச விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த பரோல் காலம் தண்டனையில் இருந்து குறையாது. ஒருவர் 5 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றால் பரோலில் 1 மாதம் வெளியே வந்தாலும் 5ஆண்டு முழுமையாக தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு பரோல் வழங்கப்படும் நிலையில், எங்கும் தப்பி ஓடமாட்டார் என்றால் அவ்வூரில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட வேண்டும். இல்லாத பட்சத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். எந்த நிகழ்ச்சிக்காக பரோல் வழங்கப்பட்டதோ, அந்த நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்க வேண்டும். வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றால் பரோல் ரத்து செய்யப்பட்டு, கைதாகி சிறைக்கு அனுப்பப்படுவார். அதே நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கைதிகள் வெளி மருத்துவமனை சென்றால் குணமாகி விடுவார் என்னும் பட்சத்தில் அவருக்கு பரோல் வழங்கப்படும்.

இவ்வாறு பரோலில் செல்லும் கைதிகள் மீண்டும் சிறைக்கு திரும்பாத சம்பவங்களும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற 2 கைதிகள் சிறைக்கு திரும்பவில்லை. இதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் இன்னொருவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. மேலும் 1982ல் இருந்து இதுவரை பரோலில் சென்ற கைதிகள் 200க்கும் மேற்பட்டோர் சிறை திரும்பவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறை அதிகாரிகளை தவிர்த்து, அரசு பரோல் வழங்கியதால் வெளியில் சென்ற கைதிகள் மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை. இதையடுத்தே அரசு பரோல் வழங்குவது நிறுத்தப்பட்டு, சிறை அதிகாரிகள் சிறைவாச விடுமுறை வழங்கி வருகின்றனர். இதனால் பரோலில் செல்லும் கைதிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு பரோலில் செல்லும் கைதிகள் தலைமறைவானவுடன் சிறை அதிகாரிகள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிப்பார்கள். ஆனால் போலீசார் அதில் தீவிர முயற்சி எடுக்காத காரணத்தால் தலைமறைவு கைதிகள் கைது செய்யப்படுவது இல்லை.

அவர்கள் தற்போது எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்ற விவரமும் தெரியவில்லை. எனவே இவ்வாறு தலைமறைவான கைதிகளை பிடிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,சிறை கைதிகளுக்கு சிறை துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் பரோல் வழங்கிய காலக்கட்டத்தில்தான் பரோலில் சென்ற கைதிகள் அதிகளவு திரும்பி வரவில்லை. அதன்பிறகே பரோல் வழங்குவதை அமைச்சர்கள் நிறுத்தினர். தற்போது நன்னடத்தை கைதிகளுக்கு மட்டும் பரோல் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories:

>