×

தஞ்சை தமிழ் பல்கலையில் பணி நியமன முறைகேடு பலர் மீது வழக்குப்பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பணி நியமன முறைகேடு குறித்து பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் யூஜிசி விதிகளுக்கு மாறாக கடந்த 2017-18ல் லஞ்சம் பெற்றுக்கொண்டு பல நியமனங்கள் முறைகேடாக நடந்துள்ளன. எனவே, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்ளிட்ட பணி நியமன முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் தாக்கல் செய்த மனுவில், ‘‘சட்டவிரோத பணி நியமனங்கள், பதவி உயர்வு மற்றும் தகுதி உயர்வு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து  லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து உரிய நடவடிக்ைக எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், தஞ்சை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பணி நியமன முறைகேடு தொடர்பாக பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சார்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை விசாரணை அதிகாரி தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்தாண்டு ஜன.6க்கு தள்ளி வைத்தனர்.

Tags : many ,Tanzanian ,Bribery Department , Thanjavur Tamil University, abuse, case, corruption olipputturai
× RELATED பெயர் குறிப்பிடாத மத்திய ஆசிய...