ரயில்வே பராமரிப்பு பணிகள் தனியார் மயமா? மாநிலங்களவையில் வைகோ கேள்வி

சென்னை: மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி பேசுகையில், ரயில்களில் உணவுக்கூடங்கள், கழிப்பறைகளின் பராமரிப்புப் பணிகளை கைவிட ரயில்வேத்துறை தீர்மானித்து இருக்கின்றதா. ரயில்பெட்டிகளில் தூய்மை, கழிப்பறைகளின் பராமரிப்பு குறித்து எத்தனை பேர் குறைகளை தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடரிப் பெட்டிகளை தூய்மையாகப் பராமரிப்பதற்காக, மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினார். மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல்:  ரயில்களில் உணவுக்கூடங்கள், கழிப்பறைகளின் பராமரிப்பு பணிகளை கைவிட ரயில்வேத்துறை தீர்மானிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ராஜ்தானி, சதாப்தி போன்ற முதன்மையான நெடுந்தொலைவு ஓடுகின்ற 1,090 விரைவுத் தொடரிகளில் இருமுனை வழிகளிலும் தூய்மைப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

சிறுசிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற மருந்துகள், தொடர்ச்சியான இடைவெளிகளில் பெட்டிகளில் தெளிக்கப்படுகின்றன. முன்பு, குளிரிப் பெட்டிகளில் மட்டுமே குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது, அனைத்துப் பெட்டிகளிலும் வைக்கப்படுகின்றன. ரயில் பெட்டிக் கழிவறைகளின் மனிதக் கழிவுகள், முன்பு ரயில்தடங்களிலேயே கொட்டப்பட்டு வந்தது. இப்போது, பெட்டிகளிலேயே சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படுகின்றன. ரயில் தூய்மைப் பணிகளுக்கு, பயணிகளின் ஒத்துழைப்பைப் பெறுகின்ற வகையில், போதிய விழிப்புணர்வுப் பரப்புரைகளும் செய்யப்படுகின்றன.

Tags : Railway Maintenance Services ,Rajya Sabha ,Vaiko , Railway Maintenance, Rajya Sabha, Vaiko
× RELATED மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை மீண்டும் ஒத்திவைப்பு