×

கடத்தல் கும்பல் விவகாரம் சுறா மீன் வால், செதிலுக்கு சர்வதேச மார்க்கெட்டில் பல லட்சம் மதிப்பு

*குப்பையில போட்டு வீணாக்காதீங்க
* கைதான முதியவர் கதறல்

சென்னை: சர்வதேச மார்க்கெட்டில் பல லட்சம் விலைபோகும் சுறா மீன் வால், செதிலை பறிமுதல் செய்து குப்பையில் போட்டு வீணடிக்காதீங்க என்று கடத்தல் வழக்கில் கைதான முதியவர் கதறி அழுதார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 4.30 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்ல திருச்சி தர்பார் லத்தீப் (60) வந்தார். சுங்க அதிகாரிகள் அவரை நிறுத்தி பெரிய பெட்டியை திறந்து சோதனை செய்தனர். அதில் சுறா மீனின் வால்பகுதி மற்றும் செதில்கள் இருந்தன. இதன் மொத்த எடை 14 கிலோ. இதன் மதிப்பு ₹8 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரது பயணத்தை ரத்து செய்து, அவர் கொண்டு வந்த பார்சலை பறிமுதல் செய்தனர்.

இது கடல் வாழ் உயிரினம் என்பதால் சென்னையில் உள்ள மத்திய வன உயிரின குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து அதிகாரிகள், ஆய்வு செய்தபோது அது அபூர்வ வகையான சுறா மீன்களில் இருந்து எடுக்கப்பட்ட வால்கள், செதில்கள் என்பதும், இது நம்நாட்டில் வேகமாக அழிந்து வரும் உயிரினம் என்பதும் தெரிய வந்தது. மேலும், இதை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்ல மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இதை வெளிநாடுகளுக்கு கடத்துவது சட்டப்படி குற்றமாகும்.  இதைதொடர்ந்து, தர்பார் லத்தீப்பை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பதப்படுத்தப்பட்ட சுறா வால்கள், செதில்களை வைத்து சூப் தயார் செய்கின்றனர். இந்த சூப்கள் ஐந்து நட்சத்திர, ஏழு நட்சத்திர உணவு விடுதிகளில் மிக அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. மருத்துவ குணம் உடையது. சீனாவில் இந்த சூப்கள் மிகவும் பிரபலமானது என்று சுங்கத்துறையினரிடம் தெரிவித்தார். மேலும் இந்த சுறா செதில்களை வீணாக குப்பையில் கொட்டாதீங்க. பல லட்சம் மதிப்புள்ளது என்று கூறி கதறி அழுதுள்ளார். எனினும் போலீசார் லத்தீப்பிடம் சுறா மீன்கள் எந்த கடல் பகுதியில் பிடிக்கப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.



Tags : Trafficking gang, shark fish tail, international market
× RELATED செங்கல்பட்டு அருகே நள்ளிரவில்...