×

சென்னை மக்களுக்கு புதிதாக 3 ஏரிகளில் இருந்து குடிநீர் சப்ளை செய்ய முடிவு: தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை மக்களின் குடிநீருக்கு புதிதாக 3 ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் நவம்பர் மாதம் வரை பருவமழை பொய்த்துவிட்டது. அதாவது 9 செ.மீ. மழை குறைவாகவே ெபய்துள்ளது. இந்த நான்கு ஏரிகளில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீருக்கு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து குடிநீர் வாரியம் சார்பில் புறநகர் பகுதிகளில் பாசனத்துக்கு பயன்படுத்தாத ஏரிகளை குடிநீர் பயன்பாட்டுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி தற்போது மாதவரம் ஏரியில் இருந்து சென்னை மாநகரின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அம்பத்தூர், கொரட்டூர், ரெட்டேரி ஆகிய 3 ஏரிகளிலும் இருந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் பயன்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக, முதற்கட்டமாக சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரட்டூர் ஏரி ₹15 கோடியிலும், அம்பத்தூர் ஏரி ₹9 கோடி, ரெட்டேரி ஏரி ₹7 கோடி என மொத்தம் ₹31 கோடி செலவில் 3 ஏரிகளிலும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்ெகாள்ளப்படுகிறது.

அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் . இந்த 3 ஏரிகள் மூலம் 0.5 டிஎம்சி நீர் வரை குடிநீருக்கு விநியோகம் செய்ய முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது, ‘அம்பத்தூர் ஏரி 700 ஏக்கர், அம்பத்தூர் 440 ஏக்கர், ரெட்டேரி 400 ஏக்கர் நிலம் கொண்டது. இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்பை முழுவதுமாக அகற்றி, ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்தும் பட்சத்தில் 1 டிஎம்சி வரை சேமிக்க முடியும்’ என்றார்.

Tags : Chennai ,lakes ,Government of Tamil Nadu , People of Chennai, Drinking Water Supply, Government of Tamil Nadu
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...