×

சாம்பார் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: கிலோ வாங்கியவர்கள் கிராமுக்கு மாறினர்

சென்னை: வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராம் கணக்கில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பச்சை பட்டாணி, பீன்ஸ், தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென சரிந்துள்ளது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மழையால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயம் (பல்லாரி) கிலோ 30லிருந்து 80 ஆக விலை அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் (சாம்பார்) 40லிருந்து 130 ஆக விலை அதிகரித்துள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 400 லாரிகளில் வந்த காய்கறி தற்போது 250 லாரிகளாக குறைந்துள்ளது. வரத்து குறைந்த போதிலும், விசேஷ நாட்கள் இல்லாததால் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

அதாவது பச்சை பட்டாணி 130லிருந்து 60, பீன்ஸ் 60லிருந்து40, கேரட் 60லிருந்து 40, சவ்சவ் 30லிருந்து 20, முள்ளங்கி 25லிருந்து 20, அவரை 60லிருந்து 30, தக்காளி 30லிருந்து 20, கத்தரிக்காய் 35லிருந்து 25, சின்ன பாகற்காய் 40லிருந்து 30, பெரிய பாகற்காய் 50லிருந்து 40 ஆக விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், வெண்டைக்காய் கிலோ 35, சேப்பக்கிழங்கு 30, பச்சை மிளகாய் 25, குடை மிளகாய் 40 என விலை மாறாமல் அதே விலையில் விற்கப்படுகிறது. முட்டை கோஸ் 15லிருந்து 20, சேனைக்கிழங்கு 20லிருந்து 30, முருங்கைக்காய் 40லிருந்து 130, 140, 150 என விற்கப்படுகிறது. வெங்காயம் விலை என்பது ஜனவரி மாதம் 15ம் தேதி வரை குறைய வாய்ப்பில்லை. ஜனவரி 15ம் தேதிக்கு பின் புதிய வரத்து வந்த பின்னரே வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மொத்த மார்க்கெட்டில்தான் பெரிய வெங்காயம் 80, சின்ன வெங்காயம் 130 என்று விற்கப்படுகிறது. ஆனால் சில்லறை வியாபாரிகள் பெரிய வெங்காயத்தை 120 வரையும், சின்ன வெங்காயத்தை 170 என்றும் விற்கின்றனர்.


Tags : hike ,buyers , sambar onions
× RELATED மெட்ரோ ரயில் நிலைய வாகன...