×

மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்காததால் மலைபோல் தேக்கம் மயானத்தை குப்பை கிடங்காக மாற்றிய அதிகாரிகள்: நோய் பாதிப்பில் பொதுமக்கள்

தாம்பரம்: மாடம்பாக்கம் பேரூராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு இடவசதி இல்லாததால், அங்குள்ள மயானத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்கள் நோய் பாதிப்பில் தவித்து வருகின்றனர். தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் துப்புரவு ஊழியர்களால் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

இவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக மறு சுழற்சி செய்யாததால் நாளுக்கு நாள் குப்பை கழிவுகள் அதிகரித்து மலைபோல் குவிந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் இந்த கிடங்கில் குப்பை கொட்ட இடம் இல்லாததால் பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் தினமும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை அங்குள்ள மயானத்தில் கொட்டி எரித்து வந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதுடன், இந்த புகையினால் அப்பகுதி மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குப்பையை தீவைத்து எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதனால், மயானத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் அப்படியே விடப்படுகிறது. பல மாதங்களாக மயானத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், மலைபோல் குவிந்துள்ளது. தற்போது, மழைக்காலம் என்பதால், குப்பையுடன் தண்ணீர் கலந்து கடும் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பேரூராட்சி குப்பை கிடங்கில் மலைபோல் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளது. இதனை மறுசுழற்சி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பை கிடங்கில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அங்கு மேலும் குப்பை கொட்ட முடியாமல் அருகில் உள்ள மயானத்தில் குப்பை கழிவுகளை பேரூராட்சி ஊழியர்கள் கொட்டி வருன்றனர்.

இதனால் மயானத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி குப்பை கழிவுகளை பேரூராட்சி ஊழியர்கள் அடிக்கடி தீயிட்டு கொளுத்துவதால் இப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுதிணறல் உள்ளிட்டவையால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்று மயானத்தில் குப்பைக்கழிவுகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதற்கு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தால் ‘வேறு என்ன செய்வது குப்பைக்கழிவுகளை கொட்டுவதற்கு போதிய இடம் இல்லையே. எனவே எங்களுக்கு எங்கு தேவையோ அங்கு தான் குப்பைகளை கொட்ட முடியும் என அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : public ,garbage dump ,mountain , Recycling, operation, mountain stagnation, cement garbage, officials, sick, civilians
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ