×

செங்குன்றம் அருகே பரபரப்பு மின் கம்பி அறுந்து விழுந்ததில் பெண் பலி; இருவர் படுகாயம்

* பொதுமக்கள் சாலை மறியல்
* அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

புழல்: செங்குன்றம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக இறந்தார். அவரது மகன், மாமியார் படுகாயமடைந்தனர். மின் வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கே, பெண் இறப்புக்கு காரணம் எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பவானி நகர் அரிச்சந்திரன் தெருவை சேர்ந்தவர் ராஜவேலு. செங்குன்றத்தில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவரது மனைவி காவேரி (36). இவர்களது மகன் சூர்யபிரகாஷ் (9). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.

சூரியபிரகாஷ், தினமும் பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் ராஜவேலு தனது மகனை பள்ளிக்கு அனுப்ப வேனுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் காவேரி மற்றும் ராஜவேலுவின் அம்மா பத்மாவதி (63) ஆகியோரும் அங்கு வந்தனர். அப்போது, அவ்வழியாக செல்லும் மின் வயர் திடீரென அறுந்து விழுந்தது. இதில், காவேரி உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். சூர்யபிரகாஷ், பத்மாவதி ஆகியோர் படுகாயமடைந்து அலறினர். ராஜவேலு, அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.

இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சூர்யபிரகாஷ், பத்மாவதி ஆகியோரை மீட்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் செங்குன்றம் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தினர். தகவலறிந்து செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காவேரி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடயே மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12 மணி அளவில் செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த புழல் உதவி ஆணையர் ரவி தலைமையிலான போலீசார், மின்வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதத்துக்கு முன்பு இதே பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாடுகள் இறந்தன. இதுபற்றி செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவித்தும், வலுவிழந்த மின் கம்பியை மாற்றி, புதிய மின் கம்பி அமைக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டனர். இதனால் தான் தற்போது மீண்டும் மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு பெண் பலியாகியுள்ளார். இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் தற்போது பல இடங்களில் பழுதடைந்துள்ளன.

இதனால், பலத்த காற்று வீசும்போது, மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் உள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால் வெளியில் நடமாடவே அச்சமாக உள்ளது. அவ்வப்போது மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை ஆய்வு செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. இனியும் இதுபோன்ற சம்பவம் நடக்கும் முன்பாக பழுதடைந்த மின்வயர்களை மாற்றிவிட்டு புதிதாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். வலுவிழந்த மின் கம்பியை மாற்றி, புதிய மின் கம்பி அமைக்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிட்டனர். இதனால் தான் தற்போது மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு பெண் பலியாகியுள்ளார்.

Tags : ceiling , Vertical, ecstatic, power cord breaks, woman kills, two men injured
× RELATED பழனியில் போராட்டத்தில் ஈடுப்பட...