மகாராஷ்டிராவில் 4 நாள் பாஜ அரசு முடிவுக்கு வந்தது முதல்வர் பட்நவிஸ் ராஜினாமா: சுப்ரீம் கோர்ட் கெடுவால் வாக்கெடுப்பு நடக்கும்முன் திடீர் முடிவு

* துணை முதல்வர் அஜித் பவார் சொந்த கட்சிக்கே மீண்டும் ஓட்டம்
* சிவசேனா கூட்டணியின் முதல்வர் உத்தவ் தாக்கரே 1ம் தேதி பதவியேற்பு  
* காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி


மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தேவேந்திர பட்நவிஸ் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில், திடீர் திருப்பமாக முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். தனது அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்நவிஸ் அறிவித்தார். இதன் மூலம் 4 நாள் பாஜ அரசு முடிவுக்கு வந்தது. இதையடுத்து சிவசேனா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே வரும்1 ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்த போதிலும், முதல்வர் பதவியை இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதனை பாஜ ஏற்க மறுத்துவிட்டதால் இக்கட்சிகளின் 25 ஆண்டுக்கால கூட்டணி முறிந்தது.

இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது. இந்த மூன்று கட்சித் தலைவர்களும் பலமுறை கூடி பேசி புதிய கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர். அத்துடன், முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க வேண்டும் என்று மூன்று கட்சித் தலைவர்களும் ஒருமித்தமாக முடிவெடுத்தனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவியேற்கும்
என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பட்நவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதற்கு முன்னதாக அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சி அவசர, அவசரமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் தேவேந்திர பட்நவிஸ், அஜித் பவார் ஆகியோர் ராஜ்பவனுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் அஜித் பவாரின் ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.

ஆனால், அஜித் பவார் அழைத்ததன்பேரில் தாங்கள் ராஜ்பவனுக்கு சென்றதாகவும், ராஜ்பவனில் என்ன நடக்கப் போகிறது என்பது தங்களுக்கு தெரியாது என்றும் கூறி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து சரத் பவாரிடம் சரணடைந்தனர். அஜித் பவாருக்கு ஆதரவாக எப்படியும் 25 எம்.எல்.ஏ.க்கள் வந்து விடுவார்கள் என்று பாஜ எதிர்பார்த்தது. அதனாலேயே 23ம் தேதி காலை அவசர, அவசரமாக பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ராஜ்பவனுக்கு சென்ற தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேரில் 10 பேர் கட்சிக்கு திரும்பி வந்துவிட்ட நிலையில் அஜித் பவார் பக்கம் ஒரேயொரு எம்.எல்.ஏ. மட்டுமே இருந்தார். இதற்கிடையே, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை காட்டுவதற்காக நேற்று முன்தினம் இரவு மும்பை விமான நிலையம் அருகில் உள்ள கிராண்ட் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் தங்கள் கூட்டணியில் உள்ள 162 எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பை நடத்திக் காட்டியது. இதன் மூலம் இந்த மூன்று கட்சிகளுக்கும் இருக்கும் பெரும்பான்மை நிரூபணமானது. ஆனாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று நேற்று மதியம் வரை பாஜ தலைவர்கள் பலரும் கூறி வந்தனர்.

இதற்கிடையே, தேவேந்திர பட்நவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து நேற்று காலை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இன்று காலை தற்காலிக சபாநாயகரை நியமித்து எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் தேவேந்திர பட்நவிஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வரவேற்றன. அதேவேளையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவோம் என்று மகாராஷ்டிரா பாஜ தலைவர் சந்திரகாந்த் பாட்டீலும் கூறியிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான சில மணிநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அவசரமாக கூடி மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அஜித் பவார் அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்நவிசை நேரில் சந்தித்து கொடுத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அடுத்த திருப்பமாக மாலை 3.30 மணிக்கு முதல்வருக்கான வர்ஷா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்நவிஸ், தனது அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், தான் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். செய்தியாளர்களுடனான சந்திப்புக்கு பிறகு ராஜ்பவனுக்கு சென்ற தேவேந்திர பட்நவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதனை ராஜ்பவன் வெளியிட்ட செய்தி குறிப்பு உறுதி செய்தது. இதன் மூலம் கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு பதவியேற்ற தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான புதிய அரசு அடுத்த 80 மணி நேரத்தில் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை மும்பையில் நடந்தது. இதில் உத்தவ் தாக்கரே, சரத் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் தோரட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, இந்த கூட்டணியின் சார்பில், ஆளுநரிடம் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட உள்ளது. உத்தவ் தாக்கரே வரும் 1ம் தேதி பதவியேற்கிறார். மேலும், சிவசேனா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்வர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பதவி யாருக்கு அளிக்கப்படும் என்பது அந்தந்த கட்சியின் தலைமை முடிவு செய்யும்என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா மிரட்டியது பட்நவிஸ் குற்றச்சாட்டு
பாஜ.வை மிரட்டி சிவசேனா பணியவைக்க முயன்றதாக தேவேந்திர பட்நவிஸ் குற்றம்சாட்டினார்.அவர் மேலும் கூறியதாவது; சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி ஆட்சியமைக்கத்தான் மக்கள் வாக்களித்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதுமே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வேறு தொணியில் பேசத் தொடங்கி விட்டார். புதிய அரசு அமைக்க சிவசேனா முன்னிலையில் எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக அவர் கூறினார். இருகட்சிளுக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி என பா.ஜனதா ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. அப்படியிருக்கையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி கொடுத்தால் மட்டுமே கூட்டணி ஆட்சியமைக்க சம்மதிப்போம் என சிவசேனா எங்களை மிரட்டி பணிய வைக்க முயன்றது.

ஆட்சியமைப்பது தொடர்பாக நாங்கள் சிவசேனாவிடம் மட்டும்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால், தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்தே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேசத் தொடங்கி விட்டது. இப்போது தனது இந்துத்துவா கொள்கையை அடகு வைத்து விட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா கூட்டணி அமைத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீசுவதில்லை என்று நாங்கள் ஆரம்பத்திலேயே முடிவெடுத்து விட்டோம். ஆனால், குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எங்களை பார்த்து குற்றம்சாட்டிய சிவசேனாதான் இப்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி வளைத்து போட்டிருக்கிறது. முதல்வர் பதவிக்காகவும், பாஜ ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதற்காகவும் சிவசேனா தனது இந்துத்துவா கொள்கையை சோனியாவின் காலடியில் சரணடையச் செய்துள்ளது.

அஜித் பவார் ஒத்துழைப்பு அளிக்க முன்வந்ததால் நாங்கள் அவருடன் பேசி ஆட்சியமைத்தோம். ஆனால், இன்று என்னை சந்தித்த அஜித் பவார் தனிப்பட்ட காரணங்களுக்காக துணை முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவர் ராஜினாமா செய்து விட்டதால் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இதனால் நானும் ராஜினாமா செய்வது என முடிவெடுத்துள்ளேன் என்றார்.

பட்நவிஸ், அஜித் பவார் மன்னிப்பு கேட்க வேண்டும்
தேவேந்திர பட்நவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மகாராஷ்டிரா மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘பெரும்பான்மை இருப்பதாக பொய்யான தகவலை கூறி பதவியேற்ற தேவேந்திர பட்நவிஸ், அஜித் பவார் ஆகியோர் மகாராஷ்டிரா மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இவர்களது அரசு, அடுக்கி வைத்த அட்டை வீட்டை போன்று சரிந்து விழுந்துவிட்டது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை கடத்திய இவர்களது உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது’’ என்றார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?
‘மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் .வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது: மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தை காப்பாற்றும் கடமை நீதிமன்றத்திற்கு உண்டு. அரசியல் சாசன சட்ட விதிகள் என்பது மதிக்கப்பட வேண்டும்.

மேலும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகிய பின்னரும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்படாமல் உள்ளதால் குதிரைப்பேரம் நடக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் இதில் நீதிமன்றம் தலையிட்டு இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு முன்னதாக, அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்க வேண்டும். இதனை உடனடியாக மாநில ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக உடனடியாக (நேற்று மாலைக்குள்) மூத்த உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட வேண்டும். அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தாமல் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதனை நேரலையாகவும் ஒளிப்பரப்ப வேண்டும். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சட்டப்பேரவை காலை 8 மணிக்கு கூடுகிறது தற்காலிக சபாநாயகராக காளிதாஸ் நியமனம்
சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ.வைச் சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டார். புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொள்வதற்காக மகாராஷ்டிரா பேரவையை இன்று காலை 8 மணிக்கு கூட்டி ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ.வைச் சேர்ந்த வடாலா தொகுதி எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டார். தற்காலிக சபாநாயகராக அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ராஜ்பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இன்று சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு காளிதாஸ் கொலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். காளிதாஸ் கொலம்ப்கர் வடாலா தொகுதியில் இருந்து 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 7 முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் பாஜ.வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வயதில் மூத்த உறுப்பினர் என்ற முறையில் காளிதாஸ் கொலம்ப்கர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

குறைந்த காலம் முதல்வராக இருந்தவர்கள்

 3 நாட்கள்
ஜகதாம்பிகா பால்
உத்தரப் பிரதேசம்
21-23 பிப்ரவரி 1998
(44 மணி நேரம்)

 3 நாட்கள்
பி.எஸ்.எடியூரப்பா
கர்நாடகா
17-19 மே 2018
(55 மணி நேரம்)

4 நாட்கள்
தேவேந்திர பட்நவிஸ்
மகாராஷ்டிரா
23-26 நவம்பர் 2019
(80 மணி நேரம்)

6 நாட்கள்
ஓம்பிரகாஷ் சவுதாலா
அரியானா
12-17 ஜூலை 1990
6 நாட்கள்

8 நாட்கள்
நிதிஷ்குமார்
பீகார்
3-10 மார்ச் 2000

8 நாட்கள்
பி.எஸ்.எடியூரப்பா
கர்நாடகா
12-19 நவம்பர் 2007

12 நாட்கள்
எஸ்.சி.மராக்
மேகாலயா
27 பிப்ரவரி - 10 மார்ச் 1998

Tags : Patnavis ,government ,Supreme Court ,Maharashtra ,BJP ,chief patnavis ,resignation , Maharashtra, BJP, Chief Minister Patnavis, Resignation, Supreme Court
× RELATED பேரறிவாளன் மனு தொடர்பாக தமிழக அரசு 2...