×

செங்கோட்டை-விருதுநகர் மார்க்கத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் நாளை ஆய்வு: பயணிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

நெல்லை: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தாமஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நாளை செங்கோட்டை- விருதுநகர் மார்க்கத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். தென்காசி புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள நிலையில், அப்பகுதி மக்களின் ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தாமஸ் தற்போது தென்மாவட்டங்களில் ரயில்தடங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் நெல்லை முதல் நாகர்கோவில் வரையிலான வழித்தடங்களை ஆய்வு மேற்கொண்டு, ரயில் நிலையங்களை பார்வையிட்டார். நாளை செங்கோட்டை முதல் விருதுநகர் வரை ரயில்வே தடங்களை அவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சென்னை பொதுமேலாளரின் ஆய்வுக்காக கடந்த வாரத்தில் செங்கோட்டை- மதுரை மார்க்கத்தில் பயணிகள் ரயில்கள் பகல் பொழுதில் நிறுத்தப்பட்டு, தண்டவாளங்களை சீரமைத்தல், பெயின்ட் அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரிரு ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு நாளை ஆய்வு மேற்கொள்கிறது. அப்போது அம்மார்க்கத்தில் காணப்படும் ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள், பொறியியல் பிரிவு பணிகள், வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தென்காசி புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள சூழலில், அப்பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பல்ேவறு வசதிகளை செய்து தர வேண்டும் என ரயில் பயணிகள் விரும்புகின்றனர். இதுகுறித்து கடையம் ரயில்வே பயணிகள் சங்கத்தை சேர்ந்த அந்தோணி கூறுகையில், ‘‘செங்கோட்டை- விருதுநகர் மார்க்கத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை புதிய மாவட்டத்திற்காக முன் வைக்க உள்ளோம். செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இன்னமும் பின்தங்கிய சூழலில் உள்ளன. குறிப்பாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு பிட்லைன் வசதி அவசியம் தேவை. விருதுநகர் தொடங்கி கொல்லம் வரை மின்மயமாக்கல் இப்போதைய தேவையாக உள்ளது. இம்மார்க்கத்தில் டீசல் என்ஜின்களை வைத்து வெகுகாலம் இயக்கி கொண்டிருக்க முடியாது.

நெல்லை, பொதிகை ரயில்களை எழும்பூர் வரை முன்பு போல் நீட்டிப்பு செய்ய வேண்டும். கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக ேகாவைக்கும், கொல்லத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கும் புதிய ரயில்கள் தேவையாக உள்ளது. கோவையில் இருந்து மதுரை வரும் பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்திட வேண்டும். நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன் வைத்து மனுக்கள் அளிக்க உள்ளோம்.’’ என்றார். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ரயில்வே நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்வது குறித்தும், புதிய ரயில்களை அம்மார்க்கத்தில் இயக்குவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொதுமேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை காரணமாக கடந்த இரு தினங்களாக செங்கோட்டை ரயில் நிலையத்தின் சுவர்கள் பளபளக்கின்றன. இரவு நேரத்தில் மின்னொளியில் போர்டுகள் மிளிர்கின்றன.

Tags : Travelers ,Southern Railway Public Works Inspection ,Senkottai-Virudhunagar Market ,Senkottai-Virudhunagar Road , Senkottai, Virudhunagar, Southern Railway, General Manager, Inspection
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை