ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதியில் கார்த்திகை தீப விளக்கு தயாரிப்பு: ஒரு ரூபாய் முதல் 15 வரை விற்பனை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதியில் கார்த்திகை தீப விளக்கு தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. ஒரு விளக்கு ஒரு ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழா அடுத்தமாதம் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் தங்களது வீடுகளில் அகல் விளக்கு தீபம்  ஏற்றி வழிபடுவார்கள். இதற்காக பயன்படுத்தப்படும் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில், பெரியபாளையம் அருகே அகரம், தண்டலம், ஊத்துக்கோட்டை, புதுக்குப்பம், பாலவாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது; கார்த்திகை தீப திருவிழா நடைபெறவுள்ளதால் அதற்காக அகல் விளக்கு தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். அகல் விளக்குகளை சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து மக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். ஒரு விளக்கு ஒரு ரூபாய்  முதல் 15  ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். கார்த்திகை தீப திருவிழாவை தவிர மற்ற நாட்களில் மண்பானை, அடுப்பு செய்வோம். இதற்கு எங்களுக்கு ஏரிகளில் இருந்து சவுடு மண் எடுக்க  அரசு அனுமதி தரவேண்டும். தமிழக அரசு வழங்க வேண்டிய மானிய தொகை 3 ஆண்டுகளாகியும் வழங்கவில்லை. அவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: