×

50 ஆண்டுகளாக தூர்வாராத மதுராந்தகம் ஏரியை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவும், 23.3 அடி ஆழமும் கொண்டது.  மழைகாலங்களில் நிரம்பும் போது, 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் மதுராந்தகம், காந்திநகர், அருங்குணம், காவாதுர், தேவாதூர், முள்ளி, வளர்பிறை, முன்னூத்திகுப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் 3 போகம் பாசனம் பெறும். இதுமட்டுமின்றி இந்த ஏரியில் இருந்து உயர்மட்ட கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படும் நீரின் காரணமாக அருங்குணம், புளியரனங்கோட்டை, லத்தூர், பவுஞ்சூர், மடையம்பாக்கம் உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்புகின்றன. இவ்வாறு திறக்கப்படும் நீரால் மதுராந்தகம் ஏரியின் மூலம் 3 போகம் விவசாயம் நடைபெறும். குறிப்பாக நெல், வேர்க்கடலை, வாழை, கரும்பு, கேழ்வரகு, வெற்றிலை ஆகியவை பயிரிடப்பட்டு வந்தது. தற்போதைய சூழலில் ஆண்டிற்கு ஒரு போகம் விவசாயம் செய்வதற்கே போதிய தண்ணீர் இல்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதற்கு ஏரியானது, தூர்ந்து போனதுதான் காரணம். அதாவது, ஏரியின் ஆழம் 23.3 அடி என பொதுப்பணித்துறை ஆவணங்கள் மற்றும் ஏரியில் நடப்பட்டுள்ள நீரினை அளக்கும் அளவுகோலிலும் காணப்படுகிறது. ஆனால் தற்போது சுமார் 12 அடி மட்டுமே ஆழம் உள்ளது. மீதமுள்ள 11 அடி ஆழத்திற்கு மண் தூர்ந்து விட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி தூர்வாரப்பட்டவை. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுமட்டுமில்லாமல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்தும், நீர்வரத்து கால்வாய்கள் வழியாக நீர் வரவிடாமல் சமன் செய்து விட்டதாலும் நீர்வரத்து குறைந்து போய் விட்டது. ஏரி முழு கொள்ளளவை எட்டும் போது கருங்குழி, மலைப்பாளையம், பசும்பூர், வேடந்தாங்கல், மோச்சேரி, புதூர், மதுராந்தகம் நகரம் என பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. ஏரியை தூர்வார அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை’ என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘ஏரியின் முழு கொள்ளளவு 694 மில்லியன் கன அடி. தற்போது தூர்ந்து போய்விட்டதால் 250 முதல் 300 கனஅடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்க முடியும்’ என்றார். எனவே ஏரியை முழுமையாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோருகின்றனர்.

Tags : Lake: Farmers Insist , Lake Madurantakam, farmers, emphasis
× RELATED 5 வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு...