×

முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடபட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசு, சமூக நலத்துறை மூலம் மூத்த குடிமக்கள் பாதுகாப்புடனும் மரியாதையுடனும் வாழத் தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் முதியோர் ஓய்வூதியம், முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாகங்கள், நடமாடும் மருத்துவ மையங்கள், பிசியோதெரபி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மேலும், முதியோர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும் மற்றும் சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 1800-180-1253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் படி, மூத்த குடிமக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெற கூடுதலாக கீழ்காணும் முதியோர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்படுகின்றன.முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு மேற்படி உதவி எண்களைத் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தொலைபேசி எண் : 044 - 24350375

*  செல்பேசி எண் : 93612 72792

Tags : Government of Tamil Nadu ,elderly ,helpers , Elderly, Needs, Assistance Numbers, Government of Tamil Nadu
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...