×

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். மகாராஷ்டிர ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். பட்னாவிஸ் முடிவால் சனிக்கிழமை காலை 8 மணிக்கு அவசரமாக பதவியேற்ற அரசு மூன்றே நாள் 8 மணி நேரத்தில் கவிழ்ந்தது. பட்னாவிஸ் ராஜினாமாவால் உத்தவ் தாக்கரே முதல்வராவது உறுதியாகிறது. மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றபோது, அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். தேவேந்திர பட்னாவிஸ் - அஜித் பவார் இணைந்து ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணையில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாக இருதரப்பும் வாதிட்டனர். ஆனால், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது.

ஆனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சிகளும் ஒன்றாக கோரிக்கை விடுத்தன. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் மூலமாக நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். அதேபோல, முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் விலகப்போவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர  பட்னாவிஸ் முதல்வர் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு 24 மணி நீரம் முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி:

சட்டப்பேரவையில் போதிய பலம் இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படும் என அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக எந்த கட்சியையும் உடைக்காது என்றும், குதிரை பேரத்திலும் ஈடுபடாது எனவும் தெரிவித்தார். மகாராஷ்டிர மக்கள் பாஜக கூட்டணி ஆட்சிக்கு தான் வாக்களித்தனர் என்று தெரிவித்துள்ளார். சிவசேனாவை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திடீரென சிவசேனா முதல்வர் பதவி கேட்டு பேரம் பேசியது என குற்றம் சாட்டினார். முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தர சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் பாஜகவுடன் பேரம் பேசிக்கொண்டே மற்ற கட்சிகளுடன் சிவசேனா பேச்சு நடத்தியது எனவும் கூறியுள்ளார். இந்த 3 சக்கர அரசு நிலையானதாக இருக்குமா என்பது சந்தேகமே, இருப்பினும் பாஜக பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டு மக்களுக்காக குரல் எழுப்பும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

Tags : BJP ,Maharashtra ,Patnavis ,Chief Minister , Maharashtra, Deputy Chief Minister, Resignation, Ajit Pawar, Chief Minister
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ