மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித்பவார் விலகல்... முதல்வர் பட்னாவிசும் பதவியை ராஜினாமா செய்ய முடிவு?

மும்பை: மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித்பவார் ராஜினாமா செய்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் அஜித்பவார் பதவி விலகியுள்ளார். மேலும் தேவேந்திர பட்னாவிசும் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், பட்னாவிசும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரத் பவாரின் உறவினரான அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக ஆட்சியமைக்க ஆதரவு அளித்திருந்தார். இந்த நிலையில், பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பது உறுதியானதால் அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றபோது, அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

தேவேந்திர பட்னாவிஸ் - அஜித் பவார் இணைந்து ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணையில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாக இருதரப்பும் வாதிட்டனர். ஆனால், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது. ஆனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மூன்று கட்சிகளும் ஒன்றாக கோரிக்கை விடுத்தன. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, ரகசிய வாக்கெடுப்பு கூடாது, வீடியோ பதிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். தற்காலிக சபாநாயகர் மூலம் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை 5 மணி வரை பதவியேற்ற பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக-க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதில் திடீர் திருப்பமாக துணை முதலைவராக பதவியேற்ற அஜித்பவார் ராஜினாமா செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் பதவி விலகியதாக கூறப்படுகிறது. அதேபோல, முதல்வர் பதவியிலிருந்து தேவேந்திர விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 3.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.

Related Stories: