×

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டமில்லை: உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

லக்னோ: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டமில்லை என உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பை, தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய தரப்புக்கு அரசு தர வேண்டுமென உத்தரவிட்டது.

இதற்கான நிலத்தை தேர்வு செய்யும் பணியில் மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த தீர்ப்பு தொடர்பாக சன்னி வக்பு வாரிய உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்றும், வேண்டாம் என்றும் சன்னி வக்பு வாரியத்தில் இருவேறு கருத்துக்கள் இருந்தன. அதே சமயம், அயோத்தி நகருக்குள்ளாக அரசு தரும் 5 ஏக்கர் நிலத்தை பெறுவதா? வேண்டாமா? என்பது குறித்து 26ம்(இன்று) தேதி இறுதி முடிவை தெரிவிப்பதாக சன்னி வக்பு வாரியம் கூறியிருந்தது. அதன்படி, லக்னோவில் இன்று சன்னி வக்பு வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சன்னி வக்பு வாரியத்தின் நிர்வாகி அப்துல் ரசாக் கான், பெரும்பாலான உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள். எனவே, சீராய்வு மனு தாக்கல் செய்ய நாங்கள் விரும்பவில்லை, என்று தெரிவித்துள்ளார். மேலும், மசூதி கட்டுவதற்கு, அரசு நிலம் ஒதுக்கீடு செய்த பிறகு, அதை ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று, இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள் தரப்பாக வாதிட்ட சன்னி வக்பு வாரியத்தின் இந்த முடிவு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


Tags : Uttar Pradesh ,Sunny Wakpu Board Announces ,Sunni Waqf Board Announces , Ayodhya verdict, adjournment petition, Sunni Waqf Board , Babri mosque
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...