×

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின, பழங்குடி பெண்களுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: துணைமேயர், நகராட்சி துணைத்தலைவர் பதவியில் பட்டியலின, பழங்குடி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க  உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ தமிழரசன்  தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு விவரம்:


உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி துணைமேயர் உள்ளிட்ட பதவிகளில் பெண்கள் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கேட்டு முன்னாள் எம்எல்ஏ செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய குடியரசு கட்சியின் நிறுவனரான அவர், உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள் 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் என 13,870 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதவிகளுக்கு பெண்கள் பட்டியலினத்தவர், மற்றும் பழங்குடியினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும் மனுவில் கூறியுள்ளார். மாநகராட்சி துணைமேயர், நகராட்சி துணைத்தலைவர், கிராம பஞ்சாயத்தின் துணைத்தலைவர் என மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில் இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வருமாறு தமிழக அரசுக்கு 2012ம் ஆண்டு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதாக சிட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இந்த பதவிகளுக்கு பெண்கள் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு ஆணையிடுமாறு மனுவில் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் 4 மாநகராட்சிகளில் துணை மேயர் பதவி பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும் என்றும் பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை அளித்துள்ளார்.

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு:

வழக்கை விசாரித்த சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணையை ஜனவரி  7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், துணை மேயர் பதவி பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : women ,elections ,government , Madras High Court, Local Elections, Scheduled Castes, Tribes, Reservation, Government of Tamil Nadu
× RELATED கனிமொழி முதல் ஜோதிமணி வரை.....