×

ஒற்றுமையை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டம்: இன்று தேசிய அரசியல் சாசன தினம்

ஆங்கிலேய அரசின் பிடியில் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும், நமது நாட்டுக்கென ஒரு அரசியல் சாசன சட்டம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனையடுத்து சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ராப்பகலாக ஆலோசித்து அரசியல் சாசன சட்ட திட்டங்களை உருவாக்கினர். அது ஏற்றுக் கொள்ளப்பட்ட 1950, நவம்பர் 26ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் ‘தேசிய அரசியல் சாசன தினம்’ ஆக கொண்டாட வேண்டுமென மத்திய அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து கடந்த 2015ம் ஆண்டு முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குடியரசு நாடுகளுள் ஒன்றாக கருதப்படும் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உலகிலேயே மிக நீளமானதாக கருப்படுகிறது. இது அரசியலமைப்பு, கூட்டாட்சி, பொறுப்புள்ள அரசை அடிப்படையாக கொண்டது. அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசு நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி ஆக.29, 1947 அன்று தொடங்கி, 1950, ஜனவரி 26ம் தேதி நிறைவுக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழி நடத்துகின்ற நாடாக அறிவித்துக்கொண்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாக கருதப்படுகிறது. ஜனநாயக, சமதர்மத்தை வலியுறுத்தும் இந்தியா என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக்கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்த சட்டம் உருவாக்கப்படும்போது, பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசியல் சாசன வரைவுக்குழுவில் யார், யார் இடம் பெற்றிருந்தார்கள் என பார்ப்போமா? அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், கைதான் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் சில முக்கிய பிரிவுகளை காண்போமா?

பிரிவு 21: எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது. பிரிவு 25: இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கும் எந்த சமயத்தையும் தழுவும், தழுவியபடி வாழும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்கநெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பிரிவு-22: கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்த நபரும் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருத்தல் கூடாது. அவர் தனது வழக்கறிஞரை சந்தித்து அவரது ஆலோசனை மற்றும் சட்ட உதவி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுதல் கூடாது.

பிரிவு-14: இந்திய எல்லைக்குள் எந்த நபருக்கும் சட்டம் தரும் சமத்துவமோ அல்லது சட்டத்திற்குட்பட்ட சம அளவிலான பாதுகாப்போ மறுக்கப்படக்கூடாது. பிரிவு-39(ஈ): ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் ஒத்த வேலைக்கு ஒத்த ஊதியம் உண்டு. இது அரசு பின்பற்ற வேண்டிய கொள்கை நெறி. பிரிவு-15: இந்திய அரசின் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களில் வேலைக்கான சம வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும். சமயம், இனம், ஜாதி, பால், குடிவழி, பிறப்பிடம், வாழ்விடம் என்னும் அடிப்படையில் வேலைவாய்ப்பில் எந்த பாகுபாடும் காட்டப்படக்கூடாது. சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று அரசு கருதும் பட்சத்தில் வேலை வாய்ப்பில் இவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அரசு உருக்குவாக்குவதற்கு அரசுக்கு உரிமை உண்டு. எனவே, நாம் நமக்கான சட்டத்தை மதித்து ஏற்று வாழ்வோம்.

Tags : National Political Charter Day , National Political Charter Day
× RELATED தேசிய அரசியல் சாசன தினம் துவங்கியது...