×

அரசியல் சட்ட தின நிகழ்ச்சியை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்: மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்திவிட்டதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்திவிட்டதாக குற்றச்சம்சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டு நிறைவையொட்டி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது.

நாடாளுமன்ற அரங்கில் நடைபெற்று வரும் அரசியல் சட்ட தின நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சியினர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங், சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மராட்டியத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்திவிட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினர், அரசியல் சட்டத்தின் மான்பை குலைத்து வரும் மோடி அரசுக்கு, அரசியல் சட்ட நாள் கொண்டாட தகுதி இல்லை என முழக்கம் எழுப்பி வருகின்றனர். மேலும், அரசியல் சட்டத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags : Opposition parties ,law day ,assassination ,Maratham Political Law Day of Boycott ,Opposition Protests ,Democratic Massacre ,Maharashtra , Political Law Day, Parliament, Opposition, Demonstration, Maharashtra
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு