×

வருசநாடு அருகே மூலவைகையைக் கடக்க பாலம் இல்லாததால் விவசாயிகள் அவதி

வருசநாடு: வருசநாடு அருகே பாலம் இல்லாததால் மூலவைகை ஆற்றை கடக்க முடியாமல் 6 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வருசநாடு அருகே தர்மராஜபுரம் குறுக்கே மூல வைகை ஆறு உள்ளது. இப்பகுதியில் செல்வராஜபுரம், வருசநாடு, வைகைநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனால் தினமும் விவசாயிகள் மூலவைகை ஆற்றைக் கடந்து விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அத்துடன் விவசாய நிலங்களில் விளையும் விவசாயப் பொருட்களான தக்காளி, அவரை, பீன்ஸ், கத்தரி, தேங்காய், வாழை போன்ற விளைபொருட்களை மதுரை தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதி சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு ஒவ்வொரு நாளும் மூல வைகை ஆற்றை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். மழைக்காலம் என்றால் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் செல்வராஜபுரம் கிராமமக்கள் பசுமலைத்தேரி, சிங்கராஜபுரம் வழியாக வருசநாடு வந்து தர்மராஜபுரம் கிராமத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது. எனவே, மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தர்மராஜபுரத்தை சேர்ந்த விவசாயி மணிமாறன் கூறுகையில், பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கிராம பொதுமக்கள் சார்பாக மனு அளித்துள்ளோம். ஆனால், அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் விவசாய நிலத்திற்கு செல்வதற்கும், விவசாய பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் சுமார் 6 கி.மீ தூரம சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலையில் உள்ளோம். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Varshanadu ,bridge , Varshanad
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!