×

மன்னார்குடி நகராட்சி பள்ளி வளாகத்தில் வேப்பமரத்தில் கூடு கட்டிய தேனீக்கள்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சிறிய குறுக்கு சந்தில் குட்டக்கரை நகராட்சி துவக்க பள்ளி இயங்கி வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலேயே ஆங்கில வழிக் கல்வி துவக்கிய முதல் நகராட்சி பள்ளி என்ற பெருமைக்குரிய இப்பள்ளியில் தற்போது 110 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் விஜய லெட்சுமி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளி வளாகத்திற்குள் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்தனர். 12 மணியளவில் இப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு பிரமாண்டமான வேப்பம் மரத்தில் இருந்து தேனீக்கள் பறந்து அருகிலிருந்த சத்துணவு கூடத்தின் அருகே வந்தன. அதனை கண்ட மாணவர்களில் சிலர் ஓடி சென்று பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்களிடம் கூறினர்.

அதனை கேட்டு ஆசிரியர்கள் வேப்பம் மரத்தின் அருகில் சென்று பார்த்த போது அதன் உச்சியில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் கூடுகட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தலைமையாசிரியர் விஜயலட் சுமி மற்றும் ஆசிரியர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு பள்ளியில் இருந்த அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அடுத்த தெருவில் இருந்த ஒரு வீட்டில் தங்க வைத்து விட்டு தீயணைப்பு நிலையம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அறிவானந்தம் பள்ளிக்கு நேரில் வந்து பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை பாதுகாப்பாக அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியருக்கு உத்தர விட்டதை தொடர்ந்து மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மன்னார்குடி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வைரமணி மற்றும் மானெக்சா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வந்து வேப்ப மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததை பார்வையிட்டனர்.

மேலும் தேனீக்கள் கூடுகளை இரவு நேரத்தில் தான் அழிக்க முடியும் என்பதால் அதுவரை மரத்தின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து நேற்று மாலை தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து அங்கு வேப்பமரத்தில்கூடிகட்டியிருந்த தேனீக்களை தீப்பந்தங்கள் மற்றும் மருந்துகள் கொண்டு பாதுகாப்பான முறையில் அகற்றினர். இதில் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுத்த தொடக்க கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் நன்றி கூறினர்.

Tags : Mannargudi ,school premises , Bees
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...