×

பழநி அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி கண்டெடுப்பு

பழநி: பழநி அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கே.வேலூரில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கணியர் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நிருபர்களிடம் நாராயணமூர்த்தி கூறியதாவது: எங்களது மூதாதையருக்கு சொந்தமான இந்த ஓலைச்சுவடி வீட்டின் பரண்மேல் இருந்த தகரப்பெட்டிக்குள் இருந்தது. இதனை ஆராய்ந்தபோது இது அருணாசல புராணத்தின் ஒரு பிரதி என்பது தெரியவந்தது. அருணாசல புராணம் கிபி 16ம் நூற்றாண்டில் சைவ எல்லப்பநாவலரால் இயற்றப்பட்டது. அந்த புராணத்தின் மூலமும், உரையும் கொண்ட ஓலைச்சுவடி பிரதிதான் தற்போது கிடைத்துள்ளது.

ஓலைச்சுவடியின் முதல் ஓலையில், ‘பாலதண்டாயுதபாணி லட்சிப்பார்’ என்ற ஒற்றை வரி காணப்படுகிறது. அடுத்த ஓலையில் ஒரு வரலாற்று செய்தி காணப்படுகிறது. ஆனந்த வருடம் புரட்டாசி மாதம் 4 திங்கள், 5 செவ்வாய் கிழமைகளில் சாயந்திரம் கிளாரெட் துரையும், பெங்களூர் துரையும் வந்து நாயக்கரின் வழக்கு பிரச்னையை தீர்த்து வைத்து, ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு ராசியானதாக எழுதப்பட்டுள்ளது. இவர்கள் யார் என்ற செய்தியும், என்ன வழக்கு, என்ன பிரச்னை என்பதும் ஓலையில் குறிப்பிடவில்லை. இந்த உடன்படிக்கையின் நினைவாக கலையம்புத்தூரை சேர்ந்த மாரிமுத்து பண்டாரத்தின் மகன் சிதம்பர பண்டாரம் என்பவர், அருணாசல புராணத்தை தனக்கு வேண்டுமென எழுதியதாக குறிப்பிடுகிறார்.

அடுத்த ஓலையில் அருணாசல புராணத்தின் பாயிரச்சிறப்பு 21 பாடல்களில் எழுதப்பட்டுள்ளது. உடன்படிக்கை ஏற்பட்ட 6 நாட்களில் விஜயதசமி, ஆயுதபூஜையில் புராணத்தை எழுதி முடித்ததாக கூறுகிறார். பின்பு, ஒவ்வொரு சருக்கமாக எழுத  துவங்குகிறார். ஒவ்வொரு சருக்கத்தின் முடிவிலும், தன் பெயரை எழுதி, சருக்கம் முடிவு பெற்ற நாளையும், சருக்கத்தை எழுதி முடிக்க யார் உதவியும், வசதியும் செய்து கொடுத்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். கம்பராமாயணம் எழுதும்போது சடையப்ப வள்ளல் அவரை ஆதரித்து நூல் எழுத உதவி செய்ததை நாம் அறிவோம். அதுபோல் முற்காலத்தில் நூல் எழுதுவோருக்கும், அதை படி எடுப்போருக்கும் தமிழக மக்கள் வசதியும், உதவியும் செய்து கொடுத்திருக்கிறார்கள்  என்பதை இந்த ஓலைச்சுவடியின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : oasis ,Palani , Palani
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...