×

ஆட்சி அமைக்க பெரும்பான்மை உள்ளது: சிவசேனா-காங்கிரஸ்-என்.சி.பி. தலைவர்கள் ஆளுநரிடம் கடிதம்

மும்பை: சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க தங்களுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதத்தை கொடுத்தனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள் முறையே ஏக்நாத் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் மற்றும் பாலாசாகேப் தோரத் ஆகியோர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தேர்தலுக்கு பிறகு, சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் சேர்ந்து ‘மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த சனிக்கிழமை முதல்வராக பொறுப்பேற்ற தேவேந்திர பட்நவிசுக்கு மெஜாரிட்டி கிடையாது என்றும் தங்கள் கூட்டணிக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் கடிதத்தில் இந்த கட்சிகள் கூறியுள்ளன. முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தவறியதும் உடனடியாக ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

ஆளுநரிடம் கடிதத்தை கொடுத்த பிறகு மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறிய கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா உரிமை கோரும்போது இந்த 162 எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் முன்பு ஆஜர்படுத்த தயாராக இருக்கிறோம். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 54 பேரில் 51 பேரின் ஆதரவு கடிதங்கள் எங்களிடம் இருக்கிறது.

அஜித் பவார், அன்னா பன்சோடே மற்றும் தர்மராவ் பாபா ஆத்ராம் ஆகியோர் மட்டும் கையெழுத்திடவில்லை. அன்னா பன்சோடே தற்போது புனேயில் இருக்கிறார். தர்மராவ் பாபா ஆத்ராம் குருகிராம் சென்றுள்ளார். ஆனால் கட்சி முடிவின்படி நடந்து கொள்வதாக அவர் உறுதி அளித்துள்ளார். அஜித் பவாரையும் கட்சிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கடைசி முயற்சியை நான் எடுப்பேன். இவ்வாறு ஜெயந்த் பாட்டீல் கூறினார்.சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.

Tags : Shiv Sena ,Governor ,Congress ,NCP ,Majority , To form the rule, the majority, the Shiv Sena-Congress-NCP. Leaders, Letter to the Governor
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை