×

ஸ்ரீ பெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலைக்கு மீண்டும் புத்துயிர்: அடுத்த ஆண்டு மார்ச்சில் உற்பத்தி

புதுடெல்லி: ஸ்ரீ பெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் நிறுவனம் ஏற்று நடத்த உள்ளதாகவும், இங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தி துவங்கும் எனவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மொபைல் போன் சந்தையில் கோலோச்சி வந்த நோக்கியா நிறுவனம், சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலை அமைத்தது. 2006ம் ஆண்டு இங்கு உற்பத்தி துவங்கியது. 2008-2009ல் இது மிகப்பெரிய மொபைல் உற்பத்தி ஆலையாக உருவெடுத்தது.

அதன்பிறகு, தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கல் காரணமாக மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. 2013ல் அந்த ஆலையில் ஐ.டி.ரெய்டு நடத்தினர். சுமார் ரூ.21,000 கோடிக்கு மேல் நோக்கியா வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. பின்னர், இங்கு உற்பத்தி செய்ய போன்களை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக உள்ளூர் சந்தையில் விற்கப்பட்டதால் அதற்கான விற்பனை வரியாக ரூ.2,400 கோடியை தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் ஆலையை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு நோக்கியா தள்ளப்பட்டது. பின்னர், ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஏற்று நடத்தியது. வரி சிக்கலுக்கு பிறகு ஆட்குறைப்பு செய்யப்பட்டு, இறுதியாக 850 ஊழியர்களே இருந்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனமும் கைவிட்டதால், 2014 நவம்பர் 1ம் தேதி ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  நேற்று கூறியதாவது: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது. இந்த போன் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, உள்ளூர் விற்பனைக்கும்  அனுப்பப்படும். இதுபோல், சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் நோக்கியா ஆலையை, சால்காம்ப் என்ற நிறுவனம் ஏற்று நடத்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் இந்த நிறுவனம்,அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை துவக்கும். இதனால் நேரடியாக 10,000 பேரும் மறைமுகமாக 50,000 பேரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார்.

* நோக்கியா ஆலையில் 2006ல் உற்பத்தி துவங்கியது. பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்.
* 2013ல் வருமான வரி ரெய்டுக்கு பிறகு ரூ.21,000 கோடிக்கு வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் விற்பனை வரி ரூ.2,400 கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
* வரிச்சிக்கல் காரணமாக தள்ளாடிய நோக்கியா ஆலையை, மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்த முன்வந்தது. பின்னர், 2014ல் அந்த முயற்சியும் கைவிடப்பட்டு ஆலை நிரந்தமாக மூடப்பட்டது.


Tags : plant ,Nokia ,Sri Mahakudur , In Sri Mathur, the Nokia plant was revived and produced in March next year
× RELATED பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி