×

ஜூலியன் அசாஞ்சே சிறையில் இறக்க நேரிடும்: இங்கிலாந்து உள்துறைக்கு டாக்டர்கள் கடிதம்

லண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உடல், மனநிலை மிகவும் மோசமடைந்து வருவதால், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றும்படி பரிந்துரைத்து, இங்கிலாந்து உள்துறை அமைச்சர், செயலருக்கு மருத்துவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் நிறுவனத்தை கடந்த 2006ல் தொடங்கினார். ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்த ராணுவ ரகசிய ஆவணங்களை கடந்த 2010ம் ஆண்டு அவர் வெளியிட்டார்.

இதனால், அவர் மீது உளவு பார்த்தல் உள்பட 18 வழக்குகள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 175 ஆண்டுகளை வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரை நாடு கடத்தும் சூழல் ஏற்பட்டதால் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 2012ல் தஞ்சமடைந்தார். ஈகுவடார் அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவர் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இங்கிலாந்து உள்துறை அமைச்சர், செயலாளர் ப்ரீதி சுஷில் படேலுக்கு எழுதிய 16 பக்க கடிதத்தில், ஜூலியன் அசாஞ்சேவின் உடல், மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரை சிறையில் இருந்து பல்கலைக் கழக மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளனர். மேலும், அசாஞ்சேயின் உடல், மனநிலை குறித்த ஆழ்ந்த கவலையை தெரிவிக்கவே இக்கடிதத்தை எழுதி உள்ளோம்.

அவருக்கு உடல், உளவியல் சிகிச்சை தேவை என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ஐநா.வின் சிறப்பு நிபுணர் நீல்ஸ் மெல்சர் கூறிய போது, கவலை, மன அழுத்தத்தால் அசாஞ்சேவுக்கு மாரடைப்பு அல்லது நரம்பு தளர்ச்சி தொடர்பான உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை விரைவில் உருவாக வாய்ப்புள்ளது’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Julian Assange ,UK ,prison ,Doctors , Julian Assange, prison, dying, UK interior, doctors letter
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...