ஐ.பி.எஸ் அதிகாரி சிவனாண்டி வழக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தொடர்பான வழக்கில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அடுத்த இரண்டு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னையில் சவுத் இண்டியா பாட்டிலிங் என்ற நிறுவனத்தை தொடங்குவதற்காக பணம் முதலீடு செய்தால் லாபத்தில் 25 சதவீத பங்கு தரப்படும் என்று பாண்டிராஜ் என்பவரை சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர் அணுகியுள்ளனர். இதையடுத்து தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ50 லட்சத்தை பாண்டிராஜ் அந்த கம்பெனி பெயரில் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், அவருக்கு சேரவேண்டிய பங்குத் தொகை கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவர் விசாரித்ததில் அவர் டெபாசிட் செய்ததற்கான எந்த ஆதாரமும் கம்பெனியில் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், புகாரை வாபஸ் வாங்குமாறு ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தனக்கு நெருக்கடி தந்ததாகவும் பாண்டிராஜ் புகார் அளித்திருந்தார். வழக்கின் விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜரான பாண்டிராஜை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்றபோது, அவர்களிடம் இருந்து தப்பிய பாண்டிராஜ் தன்னை கடத்த முயன்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி 70க்கும் மேற்பட்ட வக்கீல்கள் 2015 ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டை முற்றுக்கையிட்டனர். அங்குள்ள பூந்தொட்டிகளை உடைத்தனர். இது சம்பந்தமாக சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த மூன்று வழக்குகளையும் முதலாவதாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் பின்னர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோர் பதில் மனு தாக்கல் வேண்டும் எனக்கூறி வழக்கை அடுத்த 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

>