×

சேலம் காடையாம்பட்டி அருகே பெண் குழந்தையை 20,000க்கு விற்ற பெற்றோர்

காடையாம்பட்டி: சேலம் மாவட்டம்,  காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி சேத்துப்பாதை பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி சின்னத்தம்பி(35).  இவரது மனைவி உமா(30). இவர்களுக்கு ஏற்கனவே 8 வயதில் இரட்டை பெண் குழந்தைகளும், ஆகாஷ்(4) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், 3வது முறையாக கர்ப்பமான உமாவுக்கு, கடந்த 11ம் தேதி காடையாம்பட்டி அரசு மருத்துவமனையில் பெண்  குழந்தை பிறந்துள்ளது. அதை அவர்கள் ₹20 ஆயிரத்திற்கு விற்பனை செய்து விட்டதாக தீவட்டிப்பட்டி விஏஓ பெருமாளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. விசாரித்தபோது, உறவினர் ஒருவர் குழந்தையை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும், ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்து விடுவார் என்றும் சின்னதம்பி தெரிவித்தார். இதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும்  வட்டார மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கேயே காத்திருந்தனர். ஆனால்,   வெகுநேரமாகியும் குழந்தையை  யாரும் கொண்டு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த  அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,  டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த  சின்னத்தம்பி-ஜமுனா தம்பதியிடம் ₹20 ஆயிரத்திற்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை வாங்கி வராவிட்டால், கடும் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து, அடுத்த ஒரு மணி நேரத்தில், காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சின்னதம்பி-உமா தம்பதி, குழந்தையை எடுத்து வந்தனர். பின்னர், அவர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாவிட்டால், முறைப்படி அரசு தொட்டில் குழந்தைகள் மையத்தில் சேர்க்க வேண்டும். அப்படியில்லாமல், குழந்தையை விற்பனை செய்வது குற்றம் என்றும், இனிமேல் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.  சின்னதம்பி-ஜமுனா தம்பதியிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், உமாவிடம் ₹20 ஆயிரத்திற்கு, குழந்ைதயை வாங்கி யதாக தெரிவித்தனர். அவர்களிடம், உரிய முறையில் குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : Parents ,baby girl ,Salem Kadayampatti ,Salem Kadayampatti Parents , Salem ,Kadayampatti,baby girl , 20,000
× RELATED பேரணி மூலம் பெற்றோர்களுக்கு...