×

பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்புகோரி வழக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் தற்போது பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல்,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.இதே போல், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் வரும் 30 தேதியுடன் நிறைவடைய  உள்ள நிலையில்,  கால நீட்டிப்பு செய்ய உத்தரவிட கோரி பொன்மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்.மாணிக்கவேல் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 10ம் தேதி வரை சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவுக்கு 274 வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததற்கு பிறகு 10 வழக்குகள் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டன. பல மாவட்ட போலீசார் 8 வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்தனர். ஆனால், அந்த எப்ஐஆர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.சிறப்பு பிரிவு 18 வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. மாவட்ட டிஎஸ்பிகள் பதிவு செய்த 31 எப்ஐஆர்கள் அதிகாரிகளின் நேரடி தலையீட்டால் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 2018 நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு 3 வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டன. 17 பேர் கைது செய்யப்பட்டனர். 12 சிலைகள் மீட்கப்பட்டன. 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 3 போலீஸ் அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 4 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பதவி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த வழக்கு டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அதுவரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு பொன்.மாணிக்கவேல் தரப்பிலும், டிராபிக் ராமசாமி தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.எஸ்.மணி, உச்ச நீதிமன்றம் இதுபோல் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் பொன் மாணிக்கவேலின் பதிலுக்காகவே வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி அரசு உயர் நீதிமன்றத்தை  மிரட்டுகிறது என்று வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து கடந்த  2018 நவம்பர் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவை பிறபிக்கும் வரை சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலே நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது. இந்த மனு மீதான விசாரணையை  டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

Tags : Manikkaval ,Chennai High Court ,Gold.Manikawel , Gold.Manikawel,tenure , No order, Chennai High ,Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...