×

காற்றுமாசை தடுக்க முடியாவிட்டால் 15 மூட்டை குண்டை கொண்டு மக்களை கொன்றுவிடுங்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்

புதுடெல்லி: காற்றுமாசு பிரச்னையை குறைப்பதற்கு, நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், 15 மூட்டை வெடிகுண்டுகளை கொண்டு வந்து டெல்லி மக்களை மொத்தமாக கொன்றுவிடுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமாக கூறினர்.
அண்டை மாநில விவசாயிகள், அறுவடை முடிந்த நிலங்களில் கழிவுகளுக்கு தீ வைப்பதால் பெரும் புகை எழுகிறது. இது காற்றின்போக்கில் டெல்லியின் வான்பகுதியை வந்து சூழ்ந்துக் கொள்கிறது. இதனால் டெல்லியில் காற்றுமாசு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதனால் அண்டை மாநில விவசாயிகள் வயல்களில் கழிவுகளுக்கு தீ வைப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சற்றுக்கூட நிலைமை மேம்படவில்லை. இந்நிலையில் காற்றுமாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத பஞ்சாப், அரியானா மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் கூறுகையில், ‘‘காற்றுமாசுவை தடுக்க முடியாவிட்டால், ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் கொன்று விடுவது நல்லது. 15 மூட்டைகளில் வெடிமருந்துகளை நிரப்பிக் கொண்டு வந்து, டெல்லி மக்களை மொத்தமாக கொன்றுவிடுங்கள். அதைவிடுத்து தினம், தினம் பொதுமக்களை எதற்காக இப்படி அவதிப்பட வைக்கிறீர்கள்? காற்றுமாசு இருந்தால் என்னவென்று, மக்களை அப்படியே சாகவிட்டு விடுவீர்களா?’’ என்று ஆவேசமாக கேட்டனர். அப்போது பதில் அளித்த பஞ்சாப் தலைமை செயலாளர், ‘‘விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘உங்கள் மாநிலத்தில் இன்னமும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது நன்றாக தெரிகிறது. மக்களின் உயிர் உங்களுக்கு துச்சமாக தெரிகிறதா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

இதேபோல் அரியானா மாநில தலைமைச் செயலாளரிடம், ‘‘மக்கள் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமைச் செயலாளர்கள் அந்த பதவிக்கே தகுதியற்றவர்கள்’’ என்றனர். மேலும், ‘‘மத்திய அரசும், டெல்லி மாநில அரசும்  10 நாளில் காற்று மாசை தடுக்க ஒருங்கிணைந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும். காற்றை சுத்தப்படுத்தக் கூடிய கோபுரங்களை டெல்லியில் நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அனைத்து மாநிலங்களும் காற்று மாசு மற்றும் குடிநீர் தரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Tags : judges ,Supreme Court , Windmill, 15 bombs, Supreme Court justices
× RELATED விருதுநகர் கலசலிங்கம் ஆனந்தம்மாள்...