×

இந்தியாவுக்கு அச்சுறும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன்: நாங்கள் சிறிய நாடு...இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கருத்து

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ அமைச்சரும், ராஜபக்சேயின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். தமிழர் பகுதிகளில் அவருக்கு சிறிதளவு கூட ஆதரவு கிடைக்கவில்லை. முழுக்க, முழுக்க  சிங்களர்கள் வசிக்கும் பகுதியில்தான் கோத்தபயவுக்கு பெருவாரியான வெற்றி கிடைத்தது. தமிழ் மக்கள், சஜித் பிரேமதாசாவையே ஆதரித்தனர். இந்நிலையில், கோத்தபய அதிபராக பதவியேற்றுக் கொண்டதும், அவர் செய்த முதல் வேலையே,  பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை பதவி விலக நெருக்கடி அளித்ததுதான். இதனால், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, தனது அண்ணான ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார்.

மேலும், பல்வேறு முக்கிய பதவிகளில் தனது குடும்பத்தினரை நியமித்தார். இதனால், ஒட்டு மொத்த அதிகாரமும் ராஜபக்சே குடும்பத்திடம் சென்றது. இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான இறுதிக்கட்ட போரை நடத்தியது கோத்தபயவும்,  அப்போதைய ராணுவ அதிகாரிகளும்தான். அந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை முழுவதும் ராணுவம் ரோந்து செல்ல அதிபர் கோத்தபய உத்தரவிட்டுள்ளார். நாட்டின் பொது அமைதியை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிபர் மாளிகை கூறியுள்ளது. கச்சத்தீவிலும்  ராணுவத்தினர் ரோந்தை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. .நாடு முழுவதும் அதிபரின் இந்த உத்தரவு செல்லும் என்றாலும், தனக்கு எதிராக வாக்களித்த தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவே இந்த நடவடிக்கை என  கூறப்படுகிறது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வருகிற 29-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். மேலும் தனது அண்டைநாடுகள் உடனான உறவுமுறைகள் குறித்துப்  பேசுகையில், சூப்பர்பவர் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் நாங்கள் சிக்க விரும்பவில்லை. நாங்கள் மிகவும் சிறிய நாடு. போட்டியில் எங்களால் நீடிக்க முடியாது. இந்தியாவின் அக்கறை எங்களுக்கு நன்கு புரிகிறது. அதனால்  இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என்றார். இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஒருநாளும் செயல்படாது.
 
இந்தியா உடன் ஒரு நட்பு நாடாகவே இணைந்து செயல்படுவோம். இந்தியாவின் விருப்பங்களுக்கு எதிராக எப்போதும் செயல்படப்போவதில்லை. இலங்கை மய்யமான நாடாகவே இருக்கும். சார்பு இன்றி அனைத்து நாடுகளுடனும் இணைந்து  பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Gotabhaya Rajapaksa ,country ,India ,Sri Lankan , I will not do anything to threaten India: We are a small country ... Sri Lankan President Gotabhaya Rajapaksa comments
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!