×

ரூ.1000 கோடி நூல் விற்பனையாகாமல் தேக்கம்: பஞ்சாலைகளில் உற்பத்தி பாதியாக குறைப்பு

சோமனூர்: பஞ்சு கொள்முதல் விலையை விட நூல் விலை சரிவால் கோவை மாவட்ட பஞ்சாலைகளில் .ஆயிரம் கோடி நூல் விற்பனை செய்யாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால் பஞ்சாலை மற்றும் அதை சார்ந்துள்ள தொழில்களில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 700 பஞ்சாலைகள் உட்பட தமிழகத்தில் 1,200க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யக் கூடிய நூல் தமிழகத்திலுள்ள விசைத்தறி, பின்னலாடை தொழிலுக்கும், வெளி மாநிலத்திலுள்ள ஜவுளி தொழிலுக்கும் துணி உற்பத்தி செய்ய விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் நூலுக்கு, பஞ்சு கொள்முதல் விலையை விட, நூல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதத்தில் பஞ்சாலைகளில் 40 எஸ் வார்பு நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.215 விலை போனது. தற்போது ரூ.185 ஆக விலை குறைந்துள்ளது. 30 எஸ் வார்பு நூல் ரூ.155 இருந்தது. தற்போது, 142 ஆக குறைந்துள்ளது. 26 எஸ் நூல் ரூ.140 ஆக இருந்தது. தற்போது, ரூ130 ஆக குறைந்துள்ளது. நூல் விலை வீழ்ச்சி அடைந்ததால் நஷ்டத்திற்கு ஆளான பஞ்சாலை உரிமையாளர்கள் தங்களது நூல்களை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்துள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 52 ஆயிரம் டன் நூல் தேக்கம் அடைந்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.ஆயிரம் கோடியாகும்.

இதுகுறித்து பஞ்சாலை அதிபர்கள் கூறியதாவது: நூல் உற்பத்திக்கு தேவையான பஞ்சு ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வருகிறது. அங்கு தற்போது மழை பெய்து வருவதால், பருத்தி மற்றும் பஞ்சு வரத்து மிகவும் குறைந்துள்ளது. மேலும் வர்த்தகர்கள் தங்கள் சுய லாபத்திற்காக செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைக்காததால் பல மில்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
மேலும் பல மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, நூல் விலை குறைந்துள்ளதால், பஞ்சாலைகளில் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால், இயங்கக்கூடிய பஞ்சாலைகள் பாதி நேரம் மட்டுமே செயல்படுகிறது. இதனால் பஞ்சாலை மற்றும் பஞ்சாலை சார்ந்து தொழில் செய்யக்கூடிய பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வாறு பஞ்சாலை அதிபர்கள் கூறினர்.

Tags : Punjab , Yarn, sales, stagnation, production
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து