தி.மலையில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் குபேரன் கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் குபேரன் கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையாரை தேவர்கள் வலம் வந்து வழிபட்டதாக புராணம் தெரிவிக்கிறது. இவ்வாறு அக்னி முதல் ஈசான்ய லிங்கம் வரை தேவர்கள் வழிபட்ட லிங்கங்களாக விளங்குகின்றன. செல்வத்தின் அதிபதியான குபேரன் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று, குபேர பட்டணத்தில் இருந்து பூமிக்கு வந்து, திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தபோது, அவருக்கு லிங்கம் சுயம்புவாக தோன்றி காட்சி தந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பூஜை செய்து குபேரன் வழிப்பட்டதால் கிரிவலப்பாதையில் 7வதாக உள்ள இந்த லிங்க திருமேனி குபேர லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் குபேரன் இங்கு வழிபட்ட பின்னர் கிரிவலம் செல்வதாகவும் ஐதீகம். இந்த குபேர லிங்கத்தை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்தவர்களுக்கு அந்த பாவங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதன்படி நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர் பின்னர் கிரிவலம் சென்றனர்.

Related Stories:

>