×

தஞ்சையில் மீண்டும் விமான நிலையம்: 2020 முதல் சென்னை, பெங்களூருக்கு இயக்க திட்டம்

தஞ்சை: தஞ்சை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. 2020 செப்டம்பர் முதல் தஞ்சையில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு ஒரு காலத்தில் விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குதான் செல்ல வேண்டும். நாட்கள் செல்ல செல்ல ஏற்பட்ட வளர்ச்சிக்கு காரணமாக தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து உள்நாட்டு விமான சேவை மட்டும் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து இலங்கை தலைநகர் சிலோனுக்கு மட்டும் வெளிநாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி மற்றும் சேலம் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இதனால், சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இது, தென்மாவட்ட மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்து வருகிறது. திருச்சி அனைத்திற்கும் மைய இடமாக திகழ்வதால் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, உள்நாட்டு விமான சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முக்கிய நகரங்களில் இருந்து விமான சேவை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்க வேண்டும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய விமான போக்குவத்துத்துறை  அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி இருந்தார்.

அதில் கூறியிருப்பதாவது:  இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் போர் விமானங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக தஞ்சையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் விமான நிலையம் ஒன்றை நிறுவினார்கள். 30 வருடங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து சென்னைக்கு செல்வதற்காக சிறிய ரக விமானமான வாயுதூத் என்கிற விமான சேவையை மத்திய அரசு துவங்கியது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்படி விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது. தற்போது வினமான சேவை தொடங்கினால் லாபகரமாக இருக்கும் என்பதால் விரைவில் இதனை தொடங்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், தஞ்சையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் முதல் கட்டமாக விமான சேவையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டின் 7வது மிகப் பெரிய நகரமான தஞ்சையில் கடந்த 1980களில் விமான போக்குவரத்து சேவை நடைமுறையில் இருந்தது. வாயுதூத் என்ற சிறிய ரக விமானம் தினமும்  மதியம் சென்னைக்கு இயக்கப்பட்டது. அந்த காலகட்டங்களில்  தஞ்சை சிறிய நகரமாக  இருந்ததால், விமான சேவைக்கு இங்கு  பொதுமக்களிடையே போதுமான  வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, 2 ஆண்டுகளில் இந்த சேவையும் நிறுத்தப்பட்டது.

கடந்த  40 ஆண்டு காலங்களில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக தஞ்சை வளர்ந்து தற்போது மாநகராட்சியாகவும் ஆகிவிட்டது.  தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறார்கள். பலர் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தஞ்சை விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தஞ்சை-புதுக்கோட்டை ரோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் அருகே விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஏர் டிராபிக் பணிகள் முடிவடைந்து விமான முனைய பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன், அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தஞ்சை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Airport ,Chennai Airport ,Bangalore , Tanjore, Airport, Chennai, Bangalore
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...